46. இ. குன்றக்குடி அடிகளார்
வாழ்க்கை, கலையாக அமைய வேண்டுமானால் வந்து சூழ்ந்துள்ள துன்பங்களுக்குரிய காரண காரியங்களை ஆராய்ந்தறிய வேண்டும். துன்பங்களுக்கெல்லாம் காரணம், பெரும்பாலும் முறையாக வாழாமையேயாம்! ஒருவரைக் காணல், ஒருவர் சொல்வதைக் கேட்டல், ஒருவரோடு பேசுதல் முதலிய நிகழ்வுகள் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாய் அமைந்துவிடுகின்றன. "முகனமர்ந்து இனிது நோக்குதல்" என்பது திருக்குறள். கண்கள் ஆயிரம் ஆயிரம் கூறும். கண்களால் வளர்ந்த கதைகளும் உண்டு; கண்களால் விளைந்த தீமைகளும் உண்டு. ஆதலால், பரபரப்பின்றி, அமைதியான, மகிழ்ச்சி நிறைந்த குளுகுளுப்பைக் கண்களால் காட்டுதல், காண்பவர்களுடன் நெடிய இனிய உறவை வளர்த்துக் கொள்ளுதல், பார்வைக் கலையின் இலக்கணம்.
மற்றவர்களின் மீது கூறும் குறைகளைக் கேளாதி ருத்தல், கோள் கேளாதிருத்தல் ஆகியன கேட்டறிதலின்பால் உள்ள கலைத்திறன். இனியனவே பேச வேண்டும்; மற்றவர் குணமே கூறவேண்டும்; முகமன் கலவாத புகழ் கூறவேண்டும். இது பேசும் கலை. பொறிகள் ஐந்தும் பண்பட்ட நிலையில் பழக்கப்படுத்தப் பெற்றால் மனம் தூய்மை ஆகும்; புத்தி புண்ணியச் செயலில் ஈடுபடும்; சித்தம் அழகுடன் விளங்கும். இந்த நிலையில் வாழ்வே கலை. கலையே வாழ்வு. வாழ்வே சமயம், சமயமே, வாழ்வு என்றாகிறது.
சமயம் என்பது ஒரு தத்துவம்; ஒரு கொள்கை, ஒரு கோட்பாடு. அது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தத்துவமன்று. சான்றோர் வாழ்க்கையினின்றும் பிறந்தது சமயம். வாழ்க்கையை வழி நடத்துவது சமயம், சமயம், ஒரு வாழ்க்கை முறை. அதனால், சமயம் என்பது திருநெறி; தவநெறி; துர