பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 23

யாளர் என்ற உத்தமனாக உலவ முடிந்தது என்பது அவரிடம் குறிப்பிடத்தக்க பண்பாகும்.

இந்த நேரத்தில் ஐன்ஸ்டைன் ஜெர்மன் நாட்டைவிட்டு அமெரிக்க நாட்டுக்குத் தனது மனைவியுடனும், மற்றும் குழந்தைகளுடனும் சென்றார். அமெரிக்கா அவரது அறிவியல் சாதனைகளை. ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தால் ஆல்பர்ட்டையும் அவரது குடும்பத்தையும் அந்த நாட்டு மக்கள் வரவேற்றுப் பாராட்டி மகிழ்ந்தார்கள். அந்த நாட்டு பத்திரிகைகளும் அறிவியல் வித்தகா்களும் ஐன்ஸ்டைன் ஆய்வைப் பாராட்டினார்கள். ஆனால் இவற்றை எல்லாம் கண்ட அவர், ‘பணியுமாம் பெருமை’ என்ற குறளுக்கு இலக்கணமாக அமெரிக்காவிலே உலா வந்தார்.

அமெரிக்காவிலே மட்டுமல்ல, உலக நாடுகளில் இருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து குவிந்தன. இங்கிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்த அவர், லண்டன் மாநகரிலே மக்கள் வரவேற்புகளிலே மகிழ்ந்தார்! தனது மனைவி மக்களுடன் லண்டன் நகர் விருந்துபச்சாரங்களிலே பெர்னாட்ஷா போன்ற மேதைகளுடன் கலந்து கொண்டார்.

ஆல்பர்ட் லண்டனில் ஆற்றிய உரைகளும், ஜப்பான் நாட்டில் பேசிய அறிவியல் பேச்சுகளும், பாலஸ்தீன நாட்டில் அவர் பங்கேற்ற பாராட்டு விழா உரைகளும், சீனா, இந்தியா முதலான வேறு பல நாடுகளுக்கும் அவர் செய்த சுற்றுப்பயணங்களும் ஓர் புதிய திருப்பத்தையும் அறிவியல் எழுச்சிகளையும் உருவாக்கிற்று.

நோபல் பரிசு
பெற்றார்

உலகில் உள்ள எந்தப் பரிசுக்கும், விருதுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு நோபல் பரிசுக்கு உண்டு. இந்த பரிசுப் பணம் மிக அதிகமாக இருப்பதால் மட்டுமே உயர்ந்த பரிசு என்று மதிக்கப்படுவது இல்லை.