பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 37


கல்வி நோக்கம்

ஒரு மாணவனிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமை, அறிவு, ஆற்றல் சிந்தனை இவற்றை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, மாணவர்கள் மண்டைகளில் பல கரடுமுரடான செய்திகளைத் திணிப்பது அல்ல கல்வி.

குழந்தைகள் படிக்க ஆசைப்படுவதையே அவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தல் வேண்டும். அதை விட்டுவிட்டு, வயது முதிர்ச்சி அடைந்தவர்களது ஞானத்தை எல்லாம் கற்பிக்க முயல்வது கூடாது. இப்படிச் செய்தால், அதே குழந்தைகளிடம் தாங்கள் படிக்கவேண்டும் என்ற இயல்பான ஊக்கம், ஆர்வம் எல்லாம் பாழ்பட்டுப்போகும் என்பதை உணரவேண்டும். கல்வி மீது ஆர்வத்தை உருவாக்குவதற்குப் பதிலாக வெறுப்பை அவர்களது சிந்தனையிலே விதைக்கக்கூடாது. எதனை ஆராயவேண்டும் என்ற ஆர்வ ஊக்கத்தை உருக்குலைத்து விடக்கூடும். இதனால், தற்போதுள்ள கல்விமுறையை மாற்ற வேண்டும்.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது பயன்படும் செய்திகளை எல்லாம் பள்ளியிலேயே கற்றுக்கொடுக்கலாம் என்ற கட்டாய நிலையை கல்விமுறை கைவிட வேண்டும். வாழ்கை என்பதும் கலைதானே! அக்கலைகளை பள்ளிகளிலே கல்வி மூலமாகப் போதிப்பது என்பது ஒரு கடினமான, சிக்கலான, சிந்தனை ஓட்டத்தைக் குன்ற வைக்கும் ஒரு செயல் என்பதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.

ஒருவன் என்னதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருந்தாலும், அவன் பிறருடைய உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்தவனாக, இருக்கவேண்டும். அப்படி இருக்கத் தவறுவானானால் அவன் கல்வியால் பெற்ற பயன் என்னவோ!