பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

115


நன்மை புரிந்து நல்லபேர் எடுப்பதற்கு நல்லதொரு வாய்ப்பாகும். இவ்வாறு செய்தால் மக்கள் கூட்டம் வந்து தம்பால் விழும். அதனாலேயே, "பொறுக்கும் வேந்தன் கவிகைக்கீழ் உலகு தங்கும்" என்றார்.

கவிகை என்றால் குடை. கவிந்திருப்பதால் கவிகை எனப் பெயர் பெற்றதோ? மன்னனது குடையின் கீழே: உலகமே தங்கும் என்கிறாரே. இஃதென்ன பெரிய புதிர்? ஒருகுடை ஒருவருக்கே போதவில்லையே, உலக முழுவதும் எப்படி ஒரு குடையின்கீழ்த் தங்க முடியும்? உண்மையில் ஒரு குடையின்கீழ் வந்து தங்குவதில்லை. இவ்வாறு சொல்வது ஓர் இலக்கிய மரபு. அவ்வளவுதான்! கோடை வெயிலிலே குடைநிழல் எத்தகையதோ, அத்தகையதே குடிமக்களுக்குப் பண்புடைய வேந்தனது ஆட்சி. மன்னனது குளிர்ந்த ஆட்சியின் அறிகுறிதான் குடை எனப்படுவது. பண்புடைய வேந்தனது குளிர்ந்த ஆட்சியென்னும் குடை நிழலைவிட்டு உலகம் அப்படியிப்படிக்கூட அசையவே அசையாது - அகலவே அகலாது என்பதை அறிவிக்கவே "தங்கும்" என்ற சொல்லைப் பெய்தார் ஆசிரியர். ஒரு சிலர் மட்டுமல்லர். எல்லோருமே இன்புற்றுத் தங்குவர் என்பதை அறிவிக்கவே "உலகு" என்ற சொல்லை இட்டார் ஆசிரியர். இப்பொழுது ஒருமுறை குறளைப் படிப்போம்; "செவிகைப்பச் சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கீழ்த் தங்கும் உலகு."

இதுவரையும் இந்தக் குறளைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பார்த்தோமே; இப்பொழுது இவ்வளவையும் ஒரு வரியில் சுருக்கிச் சொல்லி முடித்துக் கொள்வோமா? "பொறுத்தார் பூமி யாள்வார்!"

மக்கட்கு இறை
"முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்"