பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

ஆழ்கடலில்


ஒருவர் வீட்டிலுள்ள ஒப்பனைகளை (அலங்காரங்களை) காசின்றிக் காணக் கூசுவதில்லை. அவர் வீட்டில் எழும் இன்னிசையைக் காசின்றிக் கேட்க வெட்குவதில்லை. அவர் வீட்டு நறுமணப் புகையைப் பணமின்றி நுகர நாணுவதில்லை. அவர் வீட்டுக் காட்சிப் பொருள்களைக் காசின்றித் தொட உட்குவதில்லை. ஆனால் அவர் வீட்டு உணவை மட்டும் காசின்றி (இலவசமாக) உண்ண வெட்கப்படுகின்றோம். பல முறை வருந்தி அழைத்தால்தான் ஒரு முறை தயக்கத்துடன் அருந்துகின்றோம். எனவே, உணவுப் பொருளை நுகர்வதற்கு அரிய முயற்சி - உழைப்பு வேண்டும் என்பது விளங்கும். இதனினும், ஒரு பெண்ணை மணந்து தொடர்பு கொள்வதற்கு அரும் பெரும் முயற்சியும் நெருக்கமும் வேண்டும். மேற்கூறிய ஐந்து முயற்சிகளும் ஒருங்கே பெண்ணின்பத்தில் உள்ளன என்பதை, "கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள" என்னும் வேறொரு குறளில் வள்ளுவரே தெரிவித்துள்ளார். இனி, நாம் கள்ளுக்கும் காமத்துக்கும் வர இவ்வளவு அடிப்படைக் கருத்துகள் போதும்.

கள் போன்ற உணவுப் பொருளைப் பெற்றுத் துய்ப்பதற்கு மிகுதியான துணிவும் ஆற்றலும் முயற்சியும் செலவழிக்க வேண்டும். அதனினும் மிகுதி காமத்துக்கு! அதனால்தான், காமத்துப்பாலில் காமத்தைப் புகழவந்த இடத்தில், கள்ளை அளவு கோலாக வைத்து, அதனினும் சிறந்ததாகக் காமத்தைக் கூற நேர்ந்தது. கிட்டத்தட்ட இரண்டையும் ஓர் ஏரில் கட்டலாம் போல் தோன்றினும் இங்கே ஒரு நுட்பம் நோக்கத்தக்கது. ஐந்து முயற்சிகளுள், காணுதல் மிகவும் எளிது என்றும், உண்ணுதல் மிகவும் அரிது என்றும் முன்னர் ஆராய்ந்து கண்டிருக்கிறோம். இந்தக் குறளிலோ, உண்டாரை மகிழச்செய்யும் கள்ளை