பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொருட்பால்
அரசியல் - இறைமாட்சி
கல்வி


இறைவனுக்குக் கல்வி வேண்டும்; முதன்மையாக நாட்டு மக்களிடையும் அவன் கல்வியை வளர்க்கவேண்டும். இது பற்றித்தான் 'இறைமாட்சி' என்னும் பகுதியையடுத்துக் 'கல்வி' என்னும் பகுதி அமைக்கப்பட்டுள்ளதோ!

கல்வி என்றால் என்ன? இதற்கு விளக்கம் வேண்டுவதின்று. எல்லோர்க்கும் தெரியும். கல்வி பற்றிய பழங்காலக் கொள்கைக்கும் இக்காலக் கொள்கைக்கும் வேற்றுமை மிக உண்டு. ஆனால், வள்ளுவர் கொள்கை என்ன என்று ஆராய்ந்து காண்பதுதான் இங்கே நம் வேலை, வள்ளுவரின் கல்விக் கொள்கை, பிற்காலப் பெரிய கல்வி வல்லுநர்களின் கொள்கைளுக்கு (Doctrines of Great Educators) ஒத்து வருகிறதா என்றுதான் பார்த்து விடுவோமே!

கற்றலும் நிற்றலும்

தெளிவுரை) கற்க வேண்டியவற்றைப் பழுதறக் கற்க வேண்டும். அதன்படியே நடக்கவும் வேண்டும்.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக.""

(பதவுரை) கற்பவை = கற்கக்கூடியவற்றை, கசடு அறக் கற்க = குற்றமறக் கற்கவேண்டும். கற்றபின் = கற்றதும், அதற்குத் தக நிற்க = அவ்வாறு கற்றதற்கு ஏற்றபடி நின்றொழுக வேண்டும். (கசடு = குற்றம்; தக =ஏற்ப = பொருந்த; நிற்றல் = ஒழுகுதல் - நடத்தல்..)