பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

151


(பரிமேலழகர் உரை) பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றாதலான், செல்வர் முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போல, தாமும் ஆசிரியர் முன் ஏக்கற்று நின்றுங் கற்றார் தலையாயினார்; அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்று மிழிந்தாரே யாவர்.

(ஆராய்ச்சி உரை) இங்கே பரிமேலழகர்களுக்கு ஓர் அறைகூவல்! பரிமேலழகரை விட்டால் திருக்குறளுக்கு வேறு புகல் இல்லை என்னும் கூட்டம் ஒன்று இருந்தது மட்டுமில்லை - இன்னும் இருக்கிறது. ஆமாம், அது என்ன செய்யும்! தானிருக்கும் கிணறு மட்டுந்தானே தனக்குத் தெரியும். எனவே, கிணற்றுத் தவளையைப் போல, எவரும் தம் குட்டையனுபவத்தைக் கொண்டு உலகத்தை அளக்கவோ - ஆழம் பார்க்கவோ கூடாது. பரிமேலழகர்கள் இங்கே பதில் சொல்லட்டும்!

நான் இளமையில் படித்ததெல்லாம் பரிமேலழகர் உரைதான். எனக்குப் பாடம் சொன்னவர்கள் எல்லோரும் பரிமேலழகர் உரையைப் பின்பற்றித்தான் சொன்னார்கள். நானும் நம்பியிருந்தேன். நாளடைவில், இந்தக் குறளுக்கு அவர் சொல்லும் உரையின் பொருத்தமில்லாமையை உணர்ந்தேன். என் கருத்துக்கு மணக்குடவர் உரையும் ஊக்கந் தந்தது. இனிக் குறளுக்கு வருவோம்.

இப்பொழுது ஒருமுறை குறளையும் பரிமேலழகர் உரையையும் படித்துப்பாருங்கள்! எனது உரையையும் படித்துப் பாருங்கள்! நான் இந்தக் குறளை ஒரே வாக்கியமாகக் கொண்டு, கல்லாதவர் கற்றவரது கடைவாயிலில் நிற்றற்கு உரியவர் - எது போல - இல்லாதவர் இருப்பவர் எதிரில் - ஏங்கி நின்றிருப்பதைப் போல், என்று பொருள் பண்ணினேன். பரிமேலழகரோ, குறளை இரண்டு வாக்கியங்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டு, கற்றார் தலையாயினார் என்றும், கல்லாதவர் கடையர் என்றும்