பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டே - ஆராய்ந்தறிந்தவனிடத்திலேயே அடங்கிக் கிடக்கும்.

(தெ-ரை) மேற்கூறிய ஐந்தின் திறத்தைத் தெரிதல் என்றால் என்ன? அஃது வருமாறு:--

தேனூறப் பேசித் தித்திப்பான தின்பண்டங்களைத் தருகின்றாள் மனைவி, வாயூற உண்டு வயிற்றை நிரப்பி விட்டான் கணவன். மேலும் தருகின்றாள். போதும் என்கின்றான். 'தாங்கள் இப்படி இரவு பகலாக உழைப்பது இதற்குத் தானே! இன்னும் கொஞ்சம் தின்னும்' என்று கொஞ்சுகின்றாள். அவ்வறிவுரைக்கு அகமகிழ்ந்து அடைக்கின்றான் மேலும், அளவு மீறியதால் அமிழ்து நஞ்சாயிற்று. உடல் நலம் கெட்டது . ஊதியம் குறைந்தது. ஒன்றன்பின் ஒன்றாய்த் துன்பங்கள் பல தோன்றின. இஃது நாக்குச் சுவையால் வந்த நலக்கேடு. ஏனையவும் இவ்விதமே!

உண்ணுவதற்காக உயிர்வாழவில்லை; உயிர்வாழ்வதற்காகவே உண்ணுவது' என்னும் கருத்துடைய பழமொழியொன்று ஆங்கிலத்தில் உண்டு. 'உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்', 'உடம்பினுக்குள்ளே உறு பொருள் கண்டேன்', 'உடம்பார் அழியில் உயிரார் அழிவர்', 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்பன திருமூலர் மொழிகள். இவற்றின் கருத்தை அறிந்தவர் மிகச் சிலரே! அவரும் நடைமுறையில் காட்டுவதில்லை.

உயிர் சிறந்த செயல்களைச் செய்யவேண்டிய கடமை உடையது. அதற்காக அவ்வுயிர் உடம்பில் நீண்ட நாள் நிலைத்து வாழவேண்டும். அதற்காக உண்ணவேண்டும்; காணவேண்டும்; கேட்கவேண்டும்; முகரவேண்டும்; உடலினைத் தூய பொருளால் தூய்மை செய்து ஓம்ப வேண்டும். இவ் ஐவகையின்பங்களே சுவை, ஒளி, ஓசை, நாற்றம், ஊறு என்பன.