பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஆழ்கடலில்


கிடக்காதீர்கள், எதிலும் தன்னலங் கருதாத துறவுள்ளம் வேண்டும் எனவும் உலகிற்கு உணர்த்தும் எச்சரிக்கை மணியாக அறத்துப்பாலைக் கொண்டால் அது மிகையாகாது. காமக்கடலையும் பொருட்கடலையும் கடக்க உதவும் கலங்கரை விளக்கமுமாகும் அவ்வறத்துப்பால்.

அவ்வறத்துப்பாலின் உட்பிரிவாகிய இல்லறவியல், துறவறவியல் எனும் இரண்டனுள். முறையே முதற்கண் இல்லறவியலை ஈண்டு எடுத்துக்கொள்வாம்:

இல்லறவியல்

இல்லறம் என்றால் மனையறம். இல் என்றால் மனை அல்லது வீடு. வீட்டிற்கு உரிய காரணத்தாலேயே. மனைவிக்கு இல், இல்லாள், இற்கிழத்தி என்னும் பெயர்கள் எழுந்தன. எனவே, இல்லறம் என்றால் வீட்டில் மனைவிமக்கள முதலியோர் சூழ இருந்து, அறநெறி தவறாமல் குடும்பம் நடாத்தும் வாழ்க்கை ஒழுங்கு என்பது பெறப்படும். இல்லற இயல் என்றால், அவ் வில்லறத்தின் இலக்கணங்களை அஃதாவது இல்லறத்தில் இருப்பவர்கள் இயற்றவேண்டிய கடமைகளைக் கூறும் பகுதி என்பது பொருள். முதற்கண் இல் வாழ்க்கை’ என்னும் தலைப்பு வருமாறு:

இல்வாழ்க்கை

இல்வாழ்க்கை என்பதற்கு ஆடவன் மனைவியுடன் வீட்டில் இருந்து நடத்தும் குடும்ப வாழ்க்கை என்பது பொருள். இல்லறத்தின் பெருமையினையும், அதனால் உண்டாகும் நன்மையினையும், இல்லறத்தாரின் கடமையினையும் தொகுத்து, சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல் என்னும் அழகுபெற இப்பகுதியில் கூறியிருத்தலின், இது முன் வைக்கப்பட்டது.