- "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
- உடையானாம் வேந்தர்க் கொளி."
(பதவுரை) கொடை = கொடுக்குங் குணமும், அளி = அருளும், செங்கோல் = செங்கோல் ஆட்சியும், குடி, ஓம்பல் குடிமக்களைக் காக்கும் பொறுப்பும், உடையானாம் = நிலையாக உடையவன் தான். வேந்தர்க்கு ஒளி = அரசர்க்கெல்லாம் விளக்கு. (அளி = அருள் - கருணை - இரக்கம்; ஓம்பல் = பாதுகாத்தல்; ஒளி = ஒளி விடும் சுடர் விளக்கு).
(மணக்குடவர் உரை) கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும், குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க் கெல்லாம் விளக்காம். (கொடுத்தல் - தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்.)
(பரிமேலழகர் உரை) வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், யாவர்க்குந் தலையளி செய்தலும், முறை செய்தலும், தளர்ந்த குடிகளைப் பேணலுமாகிய இந்நான்கு செயலையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம்.
(விளக்கவுரை) கொடை, அளி, செங்கோல், குடி ஓம்பல் என்னும் நான்கும் உடையவன், சுடர்களுக்கெல்லாம் சுடரளிக்கும் ஞாயிறே (சூரியனே) போல, வேந்தர்களுக்குள்ளே ஒளி வீசும் விளக்காவான், ஒளி என்றால் புகழ் என்ற பொருளும் உண்டு. விநாடிக்கு 1.86,000 கல் வேகத்தில் பரவும் ஒளியை (வெளிச்சம் போலவே ஒருவரது