46
ஆழ்கடலில்
கருதப்படும் முன்னோரும், தெய்வம் - கடவுளும், விருந்து - (இதற்கு முன் வராத புதிய விருந்தினரும். ஒக்கல் - சுற்றத்தார்களும், தான் - தானும் (அதாவது இல்வாழ்வானும்), என்ற - என்று சொல்லப்படுகின்ற ஐம்புலத்து - ஐந்து வகையார் இடத்திலும் செய்யவேண்டிய, ஆறு - அற நெறியை, ஓம்பல் - தவறாமல் செய்தல் தலை - தலை சிறந்ததாகும்.
(விரிவுரை) தென்புலம் - தென்திசை, இறந்து போனவர்களின் உயிர் தெற்கே செல்வதாக அக்காலத்து மக்கள் எண்ணிவந்தனர். அதற்கேற்பவே வள்ளுவரும் அறிவித்துள்ளார். எனவே, இறந்து போனவர்களை ஓம்புதல் என்றால் என்ன? தாய்தந்தையரோ. புலவர்களோ, துறவிகளோ, வள்ளல்களோ இறந்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் உயிர் தென்புலத்தில் இருந்தால்தான் நமக்கென்ன? இல்லாவிட்டால் தான் நமக்கென்ன? இது பற்றிய கவலை வேண்டியதில்லை. அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்ததற்கு அறிகுறியாக - அவர்கள் இவ்வுலகிற்குத் தொண்டாற்றியதற்கு அடையாளமாகஅவர்களைப் போலவே ஏனையோரும் நல்லவழியில் நடக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நெறியாக - அவர்களால் நன்மை பெற்ற நாம், அவர்கட்கு நன்றி செலுத்தும் வாயிலாக - அவர்கட்கு நினைவு நாள் கொண்டாட வேண்டும். இப்போதும் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுகின்றோம் அல்லவா? இறந்துபோன தாய்தந்தையரை ஆண்டுதோறும் எண்ணி நன்றி பாராட்டுபவராக நடந்து கொள்கின்றோம் அல்லவா? இவைபோல்வனவற்றையே தென்புலத்தாரை ஓம்பல் எனத் தெரிவித்துள்ளார் திருவள்ளுவர்.
தெய்வத்தை ஓம்புதல் என்றால். ஓய்வும் உறுதியும் பெறுவதற்காகக் கடவுளை வழிபடுதல்.