பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

97


“அன்னமும் மீனருவுமாளரியும் குறளும்
ஆமையுமானவனே! ஆயகர்கள் நாயகனே!
என் அவலம் களைவாய்! ஆடுகசெங்கீரை
எழுலகும் முடையாய்! ஆடுக ஆடுக” என்று,
“அன்நடை மடவாள சோதையுகந்த பரிசு
ஆனபுகழ்ப் புதுவைப்பட்டனுரைத்த தமிழ்,
இன்னிசை மாலை களிப்பத்தும் வல்லார் உலகில்
எண்டிசையும் புகழ்மிக்கு இன்பம் எய்துவரே!”

என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

“உய்ய உலகு படைத்துண்ட மணி வயிறா!” என்று தொடங்கும் பத்து பாடல்களையும் பாடுபவர்கள் எட்டு திசைகளிலும் புகழும் மிக்க இன்பமும் எய்தி மகிழ்வார்கள் எனப் பாடுகிறார்.

சுற்றிலும் ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் நீர் நிலைகளும் வயல் வெளிகளும் நிறைந்த திருவில்லிபுத்துரில் விட்டுசித்தன் என்னும் பெரியாழ்வார் கண்டெடுத்த பாவை கோதை நாச்சியார் என்னும் ஆண்டாள் உலக நன்மை கருதி கண்ணனைப் பாடி மார்கழி நோன்பிருந்து பாடிய பாடல்கள் திருப்பாவை. சங்கத் தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாடல்களும் தீஞ்சுவைத் தமிழில் அமைந்துள்ளன. அப்பாடல்களில் ஒன்று “உத்தமன் பேர்பாடினால் நாட்டில் உள்ள தீங்குகள் நீங்கும். மாதம் மும்மாரி மழை பொழியும். வயல் வெளிகள் எல்லாம் நீர் நிறைந்து செந்நெல் விளையும். பெரும் வள்ளல்களைப் போன்ற பசுக்கள் எல்லாம் குடம் குடமாய் பால் கரக்கும். உலகெல்லாம் நீங்காத வற்றாத செல்வம் பெருகி வளமாகும்” என்று ஆண்டாள் பாடுகிறார்.