பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1.தோற்றுவாய்

13


ஆழ்வார்களுக்கும் மகாகவி பாரதிக்கும் மிகுந்த உள்ளக் கிளர்ச்சியையும், செயலூக்கத்தையும் அளித்திருக்க வேண்டும்.

திருமாலின் திருவடிவங்களைச் சிறப்பாக இராமபிரானின் அருஞ்செயல்களைப் பற்றியும் இன்னும் அதிகமாக கண்ணபிரானின் சிறப்புகளைப் பற்றியும் பல வேறுவடிவங்களில் ஆழ்வார்கள் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆண்டவனை நாயகனாகவும் தங்களை நாயகியாகவும் பாவித்து ஆழ்வார்கள் சிருங்கார ரசத்துடன் அற்புதமான பல பாடல்களைப் பாடியுள்ளதைப் பார்க்கிறோம். இன்னும் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்து அவனுடைய திரு அவதாரச் சிறப்புகளைப் பாராட்டி, அவனை உள்ளங்காலிலிருந்து உச்சிவரையிலும், அவனது அங்கங்களின் அங்க அசைவுகளின் அழகையும் சிறப்புகளையும் அனுபவித்துப் பாடியுள்ளார்கள். கண்ணனின் குழந்தைப் பருவத்தைத் தாலாட்டியும், பாலூட்டியும், சோறூட்டியும் மற்றும் அம்புலிப்பருவமாக, செங்கீரைப் பருவமாக, சப்பாணிப் பருவமாக, தளர் நடைப்பருவமாக, அச்சோப்பருவமாக பாவித்துப் பாடியுள்ளார்கள்.

இன்னும் குழந்தைக் கண்ணனுக்குக் காது குத்தியும், நீராட்டியும், குழல்வாரி விட்டும் பூச்சூட்டியும் பலவேறு இளமை (குழந்தை) விளையாட்டுகள் விளையாடியும் மகிழ்ந்திருக்கிறார்கள். கண்ணனின் கணக்கில்லாத லீலைகளைக் கண்டும் கற்பித்தும் வியந்தும், பாராட்டியும், பக்தியுடன் பாடிப்பரவசப்பட்டிருக்கிறார்கள்.

பாரதி இன்னும் ஒரு படி மேலே சென்றார். பெரியாழ்வாரின் பாடல்கள் பாரதியை வெகுவாக ஈர்த்திருக்கிறது. கண்ணனைத் தாயாகவும், தந்தையாகவும், தோழனாகவும், குருவாகவும், சீடனாகவும், ஆண்டானாகவும், சேவகனாகவும், காந்தனாகவும், கண்ணம்மாவைக் குழந்தையாகவும், காதலியாகவும் பலவேறு