பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. உலகப் பெருவடிவம்

52


வானத்துச் சுடர்கள், எல்லாம் தெய்வங்கள். உலோகங்கள், மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன, மனிதர் இவை அமுதங்கள்.

இவ்வுலகம் ஒன்று. ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு-இவையனைத்தும் நன்றே. ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலை, அருவி, குழல், கோமேதகம்-இவ்வனைத்தும் ஒன்றே. இன்பம், துன்பம், பாட்டு, வண்ணான், குருவி, மின்னல், பருத்தி இஃதெல்லாம் ஒன்று. மூடன், புலவன், இரும்பு, வெட்டுக் கிளி. இவை ஒரு பொருள்.

வேதம், கடல் மீன், புயற்காற்று மல்லிகை, மலர் இவை ஒரு பொருளில் பல தோற்றங்கள், உள்ளதெல்லாம் ஒரே பொருள், ஒன்று, இந்த ஒன்றின் பெயர் "தான்” தானே தெய்வம் “தான்” அமுதம் இறவாதது. எல்லா உயிரும் இன்பம் எய்துக. எல்லா உடலும் நோய்தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க. "தான்” வாழ்க. அமுதம் எப்போதும் இன்பமாகுக.

தெய்வங்களை வாழ்த்துகிறோம், தெய்வங்கள் இன்பமெய்துக, அவை வாழ்க, அவை வெல்க, தெய்வங்களே! என்றும் விளங்குவீர், என்றும் இன்பம் எய்துவீர், என்றும் வாழ்வீர். என்றும் அருள் புரிவீர். வெள்ளையும் காப்பீர் உமக்கு நன்று தெய்வங்களே! என்பது மகாகவி பாரதியின் வசன கவிதைகளாகும். இவைவெறும் சொற்கள் அல்ல. சுவை நிறைந்த, பொருள் நிறைந்த, மின் சக்தி நிறைந்த உணர்ச்சி மிக்க தத்துவக்காட்சி நிறைந்த சொற்களாகும்.

நமது பெரியாழ்வார் ஆண்டவனுக்குப் பல்லாண்டு பாடினார். பாரதி கடவுளுக்கு நல்வாழ்த்து கூறுகிறார். ஆழ்வார்கள் வாழ்க, பாரதி வாழ்க,