பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

3


ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றி வைணவ, சைவ பக்தி இயக்கங்களை பாரத மக்களுடைய பேரியக்கங்களாக உருவாக்கி வளர்த்தார்கள். ஆழ்வார்கள் திருமாலை உலகப் பெரு வடிவமாகக் கண்டார்கள். உலகனைத்தையும் திருமால் வடிவமாகக் கண்டார்கள். திருமாலின் நின்ற வண்ணத்தையும் கிடந்த வண்ணத்தையும் கண்ணாரக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்கள். கை வண்ணத்தையும், கால் வண்ணத்தையும் கண்டு மகிழ்ந்து புகழ்ந்தார்கள்.

அனந்தசயனத்தில் அறிதுயில் கொண்ட பள்ளி கொண்டானை, துயிலெழுப்பிப் பாடினார்கள். திருமால் துயில் எழுந்து உலகைக் காக்க முன் வரவேண்டும் என்று பாடினார்கள்.

ஆழ்வார்களுடைய பாடல்களில் திருமால் பக்தியே உயிர் நாடியாகும். உயிர் மூச்சாகும். அத்துடன் சேர்ந்து ஆழ்வார்கள் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பலவற்றையும் முன் வைத்து மக்களை ஒன்றுபடுத்தினார்கள். பல்லாயிரக் கணக்கில் மக்களைத் திருவிழாக்களில் ஒன்று திரட்டினார்கள்.

தவறான கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும், பழக்க வழக்கங்களையும் நீக்கி, சத்தியக் கருத்துக்களையும் தூய்மையான தெளிவான கண்ணோட்டங்களையும் புலனறிவுகளைக் கட்டுப்படுத்தி ஒரு முகப்படுத்தும் பழக்க வழங்கங்களையும் செயல் முறைகளையும் நிலை நாட்டப் பாடுபட்டார்கள்.

இயற்கையையும் இயற்கை சக்திகளையும் பகவானுடன் இணைத்து உலகைக் காக்க வேண்டும் என்று பாடினார்கள். நாடும் மக்களும் நலம் பெறப் பாடினார்கள்.

நல்ல உணவு, நல்ல உடை, அழகிய ஆடை ஆபரணங்கள், தீதில்லாத வேலை, கோயில் குளம், பக்தி, நீராடல், திருவிழா,