பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

67


சடைகள் -தாங்கி, தவம் மேற்கொண்டு, கானகம் போய்ப் புண்ணியத்துறைகள் ஆடி வருவதற்குக் கற்பும், பெருந்தன்மையும், தம்பியும் தனது கருணையும் நல்லுணர்வும், வாய்மையும் இருக்கட்டும், வில் எதற்கு என்னும் கேள்வி எழலாம். இங்கு இராம பிரானுக்குத் தனது அவதாரக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தீயோரை அழித்து நல்லோரைக் காப்பதற்கு கற்பு, பெருந்தன்மை, தம்பி, கருணை, நல்லுணர்வு வாய்மை ஆகியவற்றுடன் தற்காப்பிற்கும் தாக்குதலுக்கும் வில்லும் அவசியமாகிறது. இதை மிகவும் அற்புதமாக மிகவும் நுட்பமாக கம்ப நாடர் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

பாரதி பாரத அன்னையை நிர் மலையே என அழைக்கிறார். அன்னையின் உள்ளத்தில் எந்தக்களங்கமும் இல்லை. சூதும் வாதும் இல்லை. கள்ளம் கபடம் இல்லை. நிர்மலமான தெளிவான தூய உள்ளம் கொண்டவள் பாரத அன்னை. பாரத மக்களின் துய வடிவத்தைக் கொண்டவளே அந்த நிர்மலை என்பது பாரதியின் வாசகம்.

பரிதியின் பேரொளி வானிடைக் கண்டோம்
பார்மிசை நின்னொளி காணுதற் கலந்தோம்
கருதி நின் சேவடி அணிவதற்கென்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்
சுருதிகள் பயந்தனை, சாத்திரம் கோடி
சொல்லருமாண்பின ஈன்றனை யம்மே!
நிருதர்கள் நடுக்குறச்சூல் கரத் தேற்றாய்
நிர்மலையே! பள்ளியெழுந்தருளாயே

என்று பாரதி தெளிவு படப் பாடுகிறார்.