பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வர்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

89


விடுதலை, (பரிபூரண சுதந்திரம்) என்னும் கருத்தை முன்வைத்து பாரதியார் மிகவும் அருமையானதொரு பாடலைப் பாடினார்.

விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை

என்றும்,

“ஏழையென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை சாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே”

என்றும் மிகவும் தனிச்சிறப்பான வரிகளைக் கொண்டப் பாடலைப் பாடினார்.

அரசியல் அடிமைத்தனத்திலிருந்தும் அன்னிய ஆட்சியிலிருந்தும், பொருளாதார ஏற்றதாழ்வுகளிலிருந்தும், ஏழ்மை வறுமை முதலிய கொடுமைகளிலிருந்தும், சமுதாய வேறுபாடுகள் பாகுபாடுகளிலிருந்தும் கொடுமைகளிலிருந்தும், முழுமையான சமூக நீதி கிடைக்கவும் மற்றும் அறியாமையிலிருந்தும் கல்லாமையிலிருந்தும் முழுமையான விடுதலை அதுவே பரிபூரண சுதந்திரம் என்னும் கருத்தை மிகவும் துல்லியமாகப் பாரதி தனது பாடல்களில் முன் வைத்தார்.

"நாலுவகுப்பும் இங்கு ஒன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்