பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வர்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

93


புத்தரும் மகாவீரரும் சத்திரிய குலத்தில் அரச குலத்தில் பிறந்தவர்கள், வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் கருத்துக்கள் பலவற்றிற்கும் எதிர்ப்புதெறிவித்து அவர்கள் புத்த சமணசமயங்களைத் தோற்றுவித்தார்கள். அந்த சமயங்கள் பொதுவாக சர்வ ஜன சமத்துவக் கருத்துக்களையும் ஜீவகாருண்யக் கருத்துக்களையும் நாட்டில் வலுவாகப் பரப்பின. இவ்விரு சமயங்களும் இந்திய நாடு முழுவதிலும் பரவின. இவை சாதி அமைப்புகளையும் வலுவாகத் தாக்கியது. அறப்பள்ளிகளும், சங்கங்களும் தோன்றின. இந்தப் பேரியக்கத்தையும் இந்திய வரலாற்றில் சந்தித்தோம்.

புத்த சமணக் கருத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும் வைசியர்கள் வணிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். அதனால் அக்காலத்தில் தோன்றிய பஞ்ச காவியங்கள், தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் முதலியவற்றில் முந்திய கால இலக்கியங்களைப் போலல்லாமல் வணிகர்களே காப்பியத் தலைவர்களாக வருவதைக் காண முடிகிறது. இந்த இலக்கியங்களில் அரசர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை இலை மறைவு காயாகக் காணமுடிகிறது.

பின்னர் தோன்றிய பக்தி இலக்கியங்கள் தமிழகத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் சாதி சமத்துவக் கருத்துக்களை வலுவாக முன் வைத்தனர். குறிப்பாக அனைத்து சாதிகளின் ஒற்றுமை என்னும் சமத்துவக் கருத்துக்களை முன் வைத்தனர். ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறப்பால் பல சாதிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் வழிபாட்டாலும் பழக்க வழக்கங்களாலும் அனைத்து சாதிகளையும் ஒன்றாகவே கருதினார்கள். ஆண்டவன் படைப்பில் அனைவரும் ஒன்று என்னும் கருத்துக்களையே வலியுறுத்திக் கூறினார்கள்.