பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     வாழ்க்கை எது?

     வாழ்வின் பொருளை எனனால் அறிய விரும்புகிறாய்
     வாழ்க்கை வரவு செலவுக் கணக்கிற் கப்பாலாம்.
 
     உயிரைக் கொண்டு வாழ்தல் கூட வாழ்வெனினும்
     உயிரை விடுதல் கூட வாழ்வின் பொருளாகும்.

     இன்று நேற்று நாளை என்னும் அளவைக்கோல்
     நன்றாகாதே வாழ்வை அதனால் அளக்காதே.

     முக்காலத்தின் எல்லைக் கப்பால் முடிவற்றே
     எக்காலத்தும் தொடரும் சுழலும் இயக்கமது.

     மூவா இளமை அழியா வளமை உயிர்ப்பாற்றல்
     நீயே படைத்துக் கொள்வதிலேதான் நிறைந்துளது.

     மாந்தன் வாழ்க்கைக் கமுக்கம் அனைத்தும் வாழ்க்கையினைச்
     சாா்ந்துள்ளமையால் தானே உண்டு, சளைக்காதே.

     வாழ்க்கைப் புதிரை வெளிப்படையாக விரும்புவையேல்
     மார்க்சின் நெஞ்சில் மண்டி எழுந்த கனலைப்பார்.

     உலகில் உழைக்கும் மக்கட்காக ஓயாமல்
     மலைபோல் எதிர்த்த முதலாளியத்தை மாய்த்தல்பார்.

     பொதுவுடைமை வாழ்வமைத்தல் ஒன்றே கோட்பாடு
     அதுவே அவனின் வாழ்வுப் பொருளாய் அமைந்ததுவே.

     நோக்கைக் குறுக்கிக் கட்டுப்பாட்டில் நுழையாதே
     வாழ்க்கை ஆற்றின் ஊற்று வற்றி வரண்டுவிடும்.

     போக்கைக் கட்டுப்பாடில்லாமல் போகவிடின்
     வாழ்க்கை எல்லை இல்லா வளம்சேர் கடலாகும்.

     வாழ்க்கை, பானை மண்ணுக்குள்ளே இருந்திடினும்
     ஆக்கும் முடிவால் ஆற்றலாலே விரிவடையும்.

108