பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     போராட்டம் ஆகட்டும்; மேலே, மேலே, பறந்து செல்
     இடைவிடாது முன்னேறிச்செல்; வானங்களுக்கு அப்பால்
     உள்ள வானவெளிகள் உனக்காகக் காத்திருக்கின்றன"
     என்று இக்பால் பாடினார்.

     இக்பால் கையாண்ட அரிய உருதுமொழி நடை பாரசீக
     மொழியின் தத்துவ வளத்தையும் செல்வாக்கையும்
     கொண்டிருந்தது; அதை நல்ல உருதுமொழி பேசுவோரும்
     அரிதின் முயன்று படித்தறிய வேண்டியிருந்தது. ஆயினும்
     அவருடைய கவியுள்ளத்தை, அதன் தன்மை நிறைந்த
     காம்பீர்யத்தை மக்கள் படிப்படியாக உணர்ந்து போற்றத்
     தொடங்கினர்.

     கலையைப் பற்றி, உயர்ந்த மக்கள் கலையைப் பற்றி இக்பால்
     விரிவாக ஆராய்ந்தார்.

     “அன்பு வெறியிலே கலை எனும் நல்லிசைப் பண் ஊட்டி
     வளர்க்கப்பட வேண்டும்; ஜீவரத்தத்தில் கரைந்து நிற்கும்
     நெருப்பாக அது திகழ வேண்டும், பொருள் இல்லா இசை
     ஜீவனற்றது. அணையும் நெருப்பில் உள்ள வெம்மையைப்
     போன்றே அதன் ஆற்றல் இருக்கும்.திறன் படைத்த கலைஞன்
     என்பவன் இயற்கையைத் துருவி அதன் பரம இரகசியங்களை,
     அற்புத அழகுகளை நமது புலன்களுக்குப் புரிய வைப்பவனே.
     அப்போது அவன் ஒரு புதிய உலகத்தைப் படைக்கின்றான்.
     நமது வாழ்க்கைக்கு ஒரு புதிய உயிர்த்தன்மையை அவன்
     அளிக்கிறான்” என்று இக்பால் கூறினார்.

     முர்ராஹ்வ-இ-சுஹ்டை என்ற நூலுக்கு எழுதியுள்ள
     முன்னுரையில் அவர் மேற்கண்டவாறு கூறுகிறார். “இறைவன்
     வாழ்கிறார்; மனிதன் வாழ்கின்றான்; இது எவ்வாறு சாத்திய
     மாகிறது? இருவரும் சிருஷ்டித் தொழிலை இடைவிடாது
     செய்து வருகின்றனர்; இதுதான் அந்த வினாவுக்கு விடை
     யாகும். ஆம்; அத்தொழில் மூலம்தான் இருவரும் வாழ்
     கின்றனர்”! என்று இக்பால் கூறினர்.

13