பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படைப்புத் தொழிலில், ஈடுபட்டுள்ள ஒரு கலைஞன், தனது சூழ்நிலையுடன் இடைவிடாது போராட்டம் நடத்துகிறான். சூழ்நிலையை வெற்றிகொள்ள அயராது போராடுகின்றான். இப் போராட்டம், அவனுடைய ஜீவனுள்ளே இருக்கும் உள்ளார்ந்த சக்திகளை மலர்விக்க அவனுக்குத் துணை செய்கிறது; கலையை உருவாக்கத் துணை செய்கிறது. இப்போராட்டம் அல்லது பரபரப்பு நிலை, அக் கலைஞனுடைய ஆளுமை (Personality)யின் வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. அது தான் கலையின் உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறாக மனிதனின் பிற நடவடிக்கைகளுக்கு உள்ளது போன்றே கலைக்கும் ஒரு பரிசோதனை வைக்கிறோம். ஆளுமையைச் சுற்றி எழும் கலை முழுமை பெற்றதாகவும் சிறந்ததாகவும் இருக்கிறது, ஆளுமையைச் சிதைக்கும் அல்லது பலவீனப்படுத்த முயலும் கலை நசிவுத் தன்மை கொண்டதாகவும் (Unhealthy) விரும்பத் தகாததாகவும் (Undesirable) அமைகிறது.

கலை கலைக்காகவே என்று பேசும் மேதாவிகளை நம் இக்பால் பாராட்டவில்லை; அந்தக் கூற்றை அவரால் சகிக்கவே முடியவில்லை. உண்மையான கலை மனித வாழ்க்கை மீது ஆழமான விரைவான முத்திரை கொண்டிருக்க வேண்டும்; கண்ணுக்கும் கருத்துக்கும் நல்விருந்தாய், உள்ளுணர்வுகளுக்கு இன்பமும் எழுச்சியும் ஊட்டவல்லதாய் இருக்க வேண்டும், அந்தச் சமயத்தில் மனிதனின் சிந்தனை ஆற்றல் முதலிய மேம்பட்ட துறைகளுக்கு நல்வழி காட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும். கலையின் நோக்கம் வாழ்க்கைக்குத் தொண்டாற்றுவதாக, வாழ்க்கையை மேன்மேலும் அழகும் பொலிவும் அமைதி நிறை இன்பமும் சேர்ப்பதாக இருக்க வேண்டும்; இன்பமும் மகிழ்ச்சியும் தருவது மட்டுமே மெய்யான கலை முயற்சிகளின் பணியாக இருக்கக் கூடாது. மெய்யான கலையின் பணி அல்லது தொழில், மனிதனின் உயர்ந்த மெல்லுணர்வுகளைத் தட்டி எழுப்புவதாக அமைய வேண்டும்" கலை பற்றி இக்பால் இத்தகைய கருத்துகளையே

14