பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     எங்கள் நாடு
     உலகில் சிறந்ததும் எங்களின் நாடே 
     ஒப்பிலா மலர்மணம் ஓங்கிய காடே 
     அலகிலாப் பாடல்கள் பாடுவம் யாமே 
     அன்புறு வானம் பாடிகள் தாமே.
     வையத்தில் எங்கெங்குச் சென்றிட்டபோதும் 
     வாழ்ந்திடும் எம்உளம் தாயகமீதில், 
     உய்யும் எம் உள்ளம் உயர்ந்திடும் நாடே 
     ஓங்கிடும் வாழ்க்கையும் தாயகத்தூடே! 
     ஈடற்றுயர்ந்ததும் எங்களின் மலையே 
     எழுந்துவான் முட்டிடும் குன்றின் தலையே 
     ஏடற்று எழில்மிகும் ஈடிலாச் செல்வி 
     எங்களைக் காத்திடும் பீடுறு புதல்வி!
     ஆயிரம் ஆயிரம் ஆறுகள் ஓடும் 
     அவள்மடி வீழ்ந்து தவழ்ந்திசை பாடும்! 
     நேயமாய் ஆறுகள் பாய்ந்து கொழிக்கும் 
     நிலங்களால் வேற்றவர் நெஞ்சம் விழிக்கும்.
     பொங்கிக் களித்தோடல் கங்கைப் பேராறே 
     பூரித்து உவந்ததும் உன் கரைப்பேறே! 
     எங்களின் வாழ்க்கை வழிப்போக்கிணைத்தாய் 
     எண்ணிப்பார் எண்ணிப்பார் அன்பில் பிணைத்தாய்!


                        28