பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     பெண்மை

     ஆண்மை என்னும் யாழில் - இசை
     அமிழ்தைப் பொழிவது பெண்மை,
     மாண்பைத் தருபவள் அவளே - ஆண்
     மானம் காப்பவள் அவளே!

     சமுதாயத்தின் ஆற்றல் - உலகச்
     சமுதாயத்தின் மேன்மை
     சமுதாயத்தின் வாழ்வு - அனைத்தும்
     தாங்கி நிற்பது பெண்மை!

     வாழ்வின் கமுக்கம் எல்லாம் - நம்மில்
     வகைப்படுத்தல் பெண்மை.
     வாழ்வின் உணர்ச்சிச் செயல்கள் - பலவும்
     வகுத்தளிப்பதும் பெண்மை.

     உள்ளம் என்னும் குளத்தில் - நீரின்
     உணர்வும் உணர்ச்சியும் பெண்மை.
     வெள்ளத்து அலர்ந்த மலர்கள் - தம்
     வீர மரபினர் என்பேன்.

     கூரிய சீரிய பார்வை - தமைக்
     கொண்டவள் நாட்டின் செல்வம்;
     ஈரிய நெஞ்சம் உடையாள் - அவளே
     எச்செல்வத்தினும் மேலாம்.

     ஆண்மை சமுகத் தொருதூண் - அதன்
     ஆற்றல் மேன்மைக்குதவும்
     தூண் மற்றொன்றுண்டதுவே - வாழ்க்கைத்
     துணையாம் பெண்மை, பெண்மை!

78