பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     செம்மலர்

     காலை இளங்காற்றுப் பூங்கொடிகள் தம்மைக்
     களித்திடும் தொட்டிலாய் ஆக்கிடுமே!
     சோலையிலே முகை மொட்டுகள் இன்னுயிர்
     சொக்கிக் களித்தசைந்தாடிடுமே!

     மலர்கள் தம் செவ்விதழ் நாவினால் அமைதியைச்
     செம்மொழி ஆக்கிப் புகன்றனவே;
     மலர் கொய்வோனின் கை அதிர்ச்சியை நாங்கள்,
     மறந்தும் நுகர்ந்திலோம்” என்றனவே.

     * * * * * *

     குன்றின் மடியினில் கொஞ்சும் சிலம்பொலி
     கொண்டுசிற் றோடைகள் பாடிவரும்;
     குன்றியே நாணிடத் தெய்வப் புனலாற்றுக்கு
     ஒப்பின்றி கூத்தில் மகிழ்ந்திடுமே.

     இயற்கையின் காதலி முன்அது கண்ணாடி
     யாக எழிலுறத் தோன்றிடுமே;
     செயற்கையின் சித்திரக் காட்சிக்கெலாம் அது
     சிந்தனை ஊற்றாக ஊன்றிடுமே.

     சிற்சில வேளை வழிபடும் கல்லினைச்
     சேரா தகன்று விலகிடுமே,
     சிற்சில வேளையில் கல்லினில் மோதிச்
     சிறப்புடைப் புள்என ஓங்கிடுமே.

     சிக்கல் மிகுந்த கடுமைத் துயர்களைத்
     தேர்ந்துணரும் திறம் கொண்டிலை நீ,
     செக்கச் சிவந்தநல் செம்மலரே அகச்
     சிந்தனை ஏதும் உனக்கிலேயோ?

85