பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

ஜப்பான், சீனா, ரஷியா இவை ஆங்கில மொழியின் ஆதிக்கத்தைப் பெறாததால் அவை வேறுபட்டுத் தம் இயல்பில் வளர்ந்தும் மாறியும் வருகின்றன. பாரதம் பழம் பெருமை உடையது; ஆங்கிலம் கல்வி மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளதே யல்லாமல் கலாச்சார மொழியாக ஏற்கவில்லை. அதனால் மேலை நாட்டுக் கலப்புத் தேவையான அளவே ஏற்பட்டு வந்திருக்கிறது. மண்வாசனை மணம் மாறாமல் இருக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நம்முடைய கதைகள் திரைப்படங்கள் பழைய பண்பாட்டைக் காக்கப் பெரிதும் பாடுபட்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது. மேலை நாட்டுத் தாக்கம் அதிகம் ஏற்பட ஏற்படப் பழைமையை நிலைநாட்ட ஆட்டம் கொடுக்காமல் கருத்துப் பிரச்சாரங்கள் அதிகம் செய்யப்படுகின்றன. இந்த நுட்பமான போராட்டத்தை நம் சிந்தனைகளிலும் எழுத்திலும் திரைப்படங்களிலும் காணமுடிகிறது. மேலை நாட்டு நடனங்களும் சண்டைக் காட்சிகளும் திரைப்படங்களில் புகுந்தபோதிலும் கதையின் அடிப்படைகளை மாற்ற முனைவதில்லை; மாற்றினால் படம் ஓடாது; மக்கள் மனோநிலையை ஒட்டித்தான் கதைகள் இயங்கவேண்டும் என்ற வியாபாரக் கண்ணோட்டம் பிடித்து இழுக்கிறது. புறமாற்றங்கள் புகுகின்றன; வரவேற்கப்படுகின்றன. மன மாற்றங்களுக்கு இடம் தரப்படுவதில்லை.

ஒப்புமைக் கூற்று

ஜப்பான் நாட்டில் வாழும் இந்திய அறிஞர் ஒருவர் சமீபத்தில் நம் நாட்டுக்கு வந்திருந்தார். அவர் தொலைக்காட்சியில் இந்த இரண்டு தேசங்களை ஒப்புமைப்படுத்திக் கூறுகின்றார் :

“இந்தியாவின் வளர்ச்சி குறித்து உங்கள் கருத்து என்ன?"