பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாள் ‘பயண நூல்’ என்று எழுதுவதாக இருந்தால் நான் முதற் பயணியாக இருக்க வேண்டும்; நான் மார்க்கோபோலோ போல ஒரு சரித்திரப் பேராசிரியன் அல்ல; அந்த தேசங்களைப் பற்றி அறிந்தவர் பலர்; வாழ்ந்தவர் பலர், சென்று கல்வி கற்றவர் பலர்; இதனை ஒரு பயண நூல் என்றால் பார்த்த இடங்கள் அவற்றின் படங்கள் அதிசயிக்கத்தக்க சாதனைகள் செய்திகள் அதில் இடம் பெற வேண்டும். செய்திகளைத் திரட்டி ஒரு பயண நூல் எழுதுவதாக இருத்தால் மற்றவர்களை நான் மதிக்காதவன் ஆகிவிடுவேன். திரைப்படங்கள் பல வெளி நாட்டுப் பின்புலத்தை வைத்துப் பின்னப்பட்டுள்ளன; பத்தாம்பசலி என்றும் பட்டம் சூட்டப்படுவேன்; எங்களுக்குத் தெரியாததை இவன் என்ன சொல்ல முடியும்? இது நியாயமான கேள்விதான்.

தெரிந்ததைத்தான் பள்ளி மாணவன் பத்துப் பக்கத்தில் கட்டுரை எழுதித் தருகிறான். அவன் என்ன எழுதுகிறான். நான் இதைப் பார்த்தேன். அதைப் பார்த்தேன் கட்டுச் சோறு கட்டிச் சென்றேன். என்பதோடு என் நண்பர்கள் வந்தார்கள் என்று எழுதி முடிப்பான்; அது கட்டுரை. அதையும் பின்பற்ற முடியாது.

பார்த்தவற்றை அறிந்தவற்றைத் தேவையானவற்றை நம் நாட்டு வாழ்வியலோடு தொடர்பு படுத்திப் பயன்படத்தக்க வகையில் (அந்த நம்பிக்கையோடு எழுதப்பட்டது) எழுதி முடித்தது இந்நூல்; செய்தியின் தொகுப்பு அல்ல; பயண அனுபவங்களும் இல்லை; அறிந்தவற்றை இலக்கிய நயம் தோன்ற எடுத்துச் சொன்னது. எனவே இது பயண நூல் அல்ல. பயண இலக்கியம் என்பது என் அறிமுகம்.

ரா.சீனிவாசன்