84
அந்தக் கைகளை எடுத்துத் தன் கைகளில் பக்தியோடு ஒற்றிக் கொண்டாள் ஊர்வசி.
“நீ பாவியல்ல இனிமேல்...! இனிமேல் நீ பாக்கியவதி,ஊர்வசி!"
அவள் மகிழ்ச்சிக் கண்ணிர் வடித்தாள்,
"நேரம் ஆகிடுச்சு, விடிஞ்சதும், மிச்சப் பேச்சை வச்சுக்கலாம். நீ இங்கே தூங்கு;நான் வெளியிலே படுத்துக்கிறேன்"என்று அறிவித்தான் அம்பலத்தரசன்.
“உங்களை நம்பியிருக்கிறவள் நான். நீங்களும் இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள்! நம் இருவர் மனமும் நமக்குக் காவல் புரியட்டும்"
அண்ணல் மகாத்மா அருட் புன்னகை சிந்திக் கொண்டிருந்தார்.
ஒளி அணைந்தது!
அறையின் கதவுகள் திறந்தே கிடந்தன !
[4]
காந்தி அடிகளின் 'சத்திய சோதனை' அம்பலத் தரசனின் நெஞ்சில் கோயில் கொண்டிருந்தது.
உருவாகி விட்டிருந்த சத்திய சோதனையில் தான் வெற்றி கொண்டு விட்டதாகவே அவன் உள்ளுற எண்ணினான். அவ்வெண்ணத்தின் பிரதிபலிப்பாக அவனுள் முகிழ்த்த மகிழ்ச்சியின் சிலிர்ப்பு அவன் மேனியை ஆட் கொண்டிருந்தது. அவன் மனச்சான்று ஆறுதல் பேணி முறுவல் பூத்தது.