பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—5—

இராசீவின் சாத்துயர் நேரத்தை, மக்களிடத்தில் மூடத் தனத்தையும், அறியாமையையும் வளர்க்க நன்கு பயன்படுத்திக் கொண்டனர், அந்தக் கெட்டிக்காரப் பார்ப்பனப் பழவேக்காடுகள்! இந்தச் சூழ்நிலை, பார்ப்பனக் குஞ்சு குளுவான்களுக்கெல்லாம் பெரிய மனத்தாக்கத்தையும் உடல் நடுக்கத்தையும் ஏற்படுத்தியதில் வியப்பில்லை. சென்னைத் தொலைக்காட்சியில், நாளுக்கொரு வகை நகைகளும் உடைகளும் அணிந்து, திரைப்பட நடிகையைப் போலச் செய்தி படிக்கும் பார்ப்பனப் பெண் ஒருத்தி, இராசீவின் மறைவால், கைம்பெண் கோலமே பூண்டு காட்சியளித்ததும், பார்ப்பனச் செய்தி படிப்பாளர் ஒருவர், தாடிமீசையுடன் கருப்பாடை அணிந்து தோற்றங் காட்டியதும் அத்தாக்கத்தினால் ஏற்பட்ட மாற்றங்களே!

இவர்கள்தாம் தம் அரசியல் தலைவரின் எதிர்பாராத மறைவால் தங்கள் துயரங்களையும் ஆற்றாமைகளையும் இவ்வாறு வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள் என்றால், நம் திராவிட இயக்கத் தலைவர்களும் 'மே 21-ஆம் நாளன்று நம் தமிழ் மண்ணில் சிந்தப்பட்ட அரத்தம் இந்தியத் திரு (டர்!)நாட்டின் ஒளிமிகுந்த ஓர் இளந்தலைவனின் அரத்த மன்றோ' என்றும், 'இவரைக் குண்டு வெடிப்பால் சாய்த்த செயலைக் காட்டு விலங்காண்டித்தனம் என்பதா? கோழைகளின் வெறிச்செயல் என்பதா? — இழி குணத்தின் வெளிப்பாடு என்பதா? இரை தேடிய பதவிப் பசியின் பகை தீர்க்கும் படலம் என்பதா? இந்திய நாட்டு அரசியலில் குழப்பம் ஏற்படுத்த எங்கிருந்தோ வன்கணாளர் ஏவிவிட்ட வஞ்சகம் சூது, சூழ்ச்சி என்பதா?' என்றும், 'எதுவாயினும், அது தமிழ் மண்ணுக்கு நேர்ந்த களங்கம்; எளிதில் துடைத்தெறிய முடியாத வெட்கக்கேடு' என்றும் திரைப்பட 'வசனம்' பேசி, நீலிக்கண்ணீர் வடித்தனர். என்னே தமிழர்களின் — தன்மானக் கேடு! மாற்றானுக்கு வால் பிடிக்கும் வல்லடிமைத்தனம்!