பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 9 —

உலக விழாக்களையும், உலக விளையாட்டுகளையும் பல கோடி உருவாக்களை வாரியிரைத்துக் கொண்டாடுவது, கலை, பண்பாட்டுப் பரிமாற்ற விழாக்கள், வேடிக்கைகள் என்று வேற்று நாடுகளில் போய் விழாக்கள், வெட்டி நிகழ்ச்சிகளை நடத்துவது, தேர்தலில் 100 கோடி முதல் 500 கோடி வரை, தரகு முதலாளிகளும், இங்குள்ள கொள்ளை முதலாளிகளும் ஆட்சியினரைக் கைகளில் போட்டுக் கொள்ளக் கறுப்புப் பணங்களைச் செலவிடுவது, தேர்தலில் திருட்டு தில்லுமுல்லு அரம்பத்தனங்களைக் கடைப் பிடிப்பது, கள்ள ஒப்போலைகளைப் போடச் செய்வது,

— தங்களுக்குப் பிடிக்காத — தங்களுடன் ஒத்துப் போகாத — இனத்தை — பிற கட்சித் தலைவர்களைத் தீர்த்துக் கட்டுவது, கீழ் இறக்குவது, அரசியல் களத்தை விட்டு அப்புறப்படுத்துவது, தங்களின் அரசியல் செயல்பாடுகளை — தங்களைப் பல வகையான விளம்பர உத்திகளைக் கையாண்டும், கோடி கோடியாக அரசுப் பணத்தைச் செலவழித்தும் — பொய்யாகவும், புனைவாகவும் பெரும் அளவில் விளம்பரப்படுத்திக் கொள்வது, அந்த வகையில் அரசின் தலையாய விளம்பரக் கருவிகளான வானொலி, தொலைக்காட்சி பிறவற்றைத் தங்களின் தனி நலத்துக்காகத் தாங்களே பயன்படுத்திக் கொள்வது, அதே போல் பிற அரசியல் தலைவர்கள் அவற்றால் விளம்பரம் பெறுவதைத் தடுப்பது, தங்களுக்கென்று குண்டு தொளைக்காத சட்டை, குண்டு தொளைக்காத இயங்கிகள், குண்டு தொளைக்காத மேடைகள் முதலிய பாசிச, முதலாளிய நாட்டுப் பாதுகாப்பு முறைகளைக் கையாள்வது, தங்களின் பாதுகாப்புக்கெனப் பல படிநிலைகளையும் வளையங்களையும் கொண்ட காவல் கட்டுப்பாடுகளையும், ஒற்றுக் காவலர்களையும் பல கோடி உருவாக்கள் செலவில் அமைத்துக் கொள்வது, நெருக்கடி நிலைகளை அறிவிப்பது, அவ்வாறு அறிவிக்காமலேயே அடக்குமுறைக் கறுப்புச் சட்டங்களைப் போடுவது, கொடிய வன்முறையான