பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

காந்தி ராமசாமியும்
பெரியார் ராமசாமியும்

ஓமந்தூரார் வெற்றி பெற்றார்:—உண்மை வெற்றி பெற்றது—உறுதிக்கும் ஒழுக்கத்துக்கும் வெற்றி கிடைத்தது—சூதுக்கும் சூழ்ச்சிக்கும் இடமளிக்க மறுத்து விட்டனர்-ஆட்சி பீடத்தைத் தமதாக்கிக்கொண்டு இலாப வேட்டையில் ஈடுபடத் திட்டமிட்டவர்களின் ஆசையில் மண் வீழ்ந்தது—மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்து நடக்கும் உத்தமர்களின் பக்கம் வெற்றி நின்றது.

கள்ளங்கபடமற்ற கிராமவாசி......................அரசியல் சூதாட்டத்துக்கு அப்பாற்பட்டவர்—தியாக முத்திரையை அரசியல் சந்தையிலே விற்கத் துணியும் வியாபாரியாக இருக்க மறுப்பவர்—சொந்த வாழ்க்கையையும், சுகத்தையும் மிகமிகக் குறைந்த அளவினதாக்கிக்கொண்ட, துறவு மனப்போக்கினர், ஏடுகளுக்குப் பின்புறம் இருந்துகொண்டு நாட்டு நிலையைக் கவனிக்க மறுக்கும் போக்கினராக இல்லாமல், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு, நம்மாலான பணியுரியும் சந்தர்ப்பம் நமக்குத் தரபட்டுள்ள நேரத்தில் நாம் நலம் செய்வதுதான் 'தர்மம்' என்ற நோக்கமுடையவர், ஏர் என்றால் என்ன என்று கேட்கும் மேனாமினுக்கி வாழ்வினர் போலன்றி, நெடுங்காலமாகக் கிராமங்களின் வாழ்வை நேரடியாக, அவர்களுடன் பழகி மட்டுமல்ல, அவர்களில் ஒருவராகவே இருந்து அறிந்து கொண்டவர். வெள்ளை ஆட்சி போகவேண்டியதற்கான காரணம், சொந்த ஆட்சி தேவை என்ற ஆவேச இலட்சியம் மட்டுமல்ல, நல்ல ஆட்சி தேவை என்ற அடிப்படை நியாயமே என்று நன்னெறியை உணர்ந்தவர். உள்ளொன்று வெளியொன்று கொண்டுழலும் உலுத்தர் போலன்றி, ஊருக்குழைப்பேன், அதனால் வந்துறும் இன்னலைப் பொறுப்பேன், என்ற உறுதி படைத்த உள்ளத்தினர். எளிய வாழ்க்கையும், சீரிய