பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15



தோட்டக்கார துரைசாமி, வயலில் வேலை செய்யும் வரதன், இப்படிப்பட்ட, பாடுபடும் மக்களோடு பெரிதும் பழகியவர்.

இப்படிப்பட்ட ஓமந்தூராருக்குத்தான், போட்டி ஏற்பட்டது—இவருடைய பீடத்தைக் கவிழ்க்கத்தான் புயல் வீசிற்று—இவரை ஒழித்துக்கட்டத்தான் முஸ்தீபுகள் பலமாக நடைபெற்றன ! இவர் வெற்றிபெற்றார்—112 ஓட்டுகள் பெற்றார்—படை திரட்டிய பிரகாசம் தோற்றார். எண்பத்திநாலே ஒட்டுகள் பெற்றார்—களிப்படைகிறோம். பெருமைப் படுகிறோம், பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம் என்று, அவருடைய நண்பர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்களில் பெரும்பாலோர் கூறி மகிழ்வதைக் காண்கிறோம்—ஆனால் நமக்கோ, இந்த வெற்றி, களிப்பைத் தருவதைவிட பயத்தை, ஊட்டுவதாகவே இருக்கிறது. ஏன் ? ஓமந்தூராருக்கு வெற்றிதான், என்ற களிப்பிலே ஈடுபட்டு, உண்மையை மறந்துவிட மறுக்கிறோம். உண்மை என்ன ? அப்படிப்பட்ட நல்லவருக்கு 'எதிர்ப்பு' ஏற்பட்டு, அவ்வளவு தன்னலமற்றவரைத் தாக்கச் சதி நடைபெற்றதே. அதனை எண்ணும்போது எவ்வளவு 'பொல்லாதவர்கள்' நாட்டிலே நடமாடிக்கொண்டுள்ளனர், என்பதல்லவா தெரிகிறது—அது நமக்குத் திகிலையும் கவலையையுமே உள்ளபடி தருகிறது.

யாரை, சகல கட்சியினரும், நல்லவர், தன்னலமற்றவர், என்று புகழ்கிறார்களோ, யாருடைய முன்னாள் நடவடிக்கையும் இந்நாள் போக்கும், துளியும் சுயநலமற்றதாக இருக்கிறதோ அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டதென்றால், அந்த எதிர்ப்பை அவர் தோற்கடித்ததிலே ஏற்படும் மகிழ்ச்சியைவிட, எதிர்ப்பு ஏற்பட முடிந்ததே அந்த நிலையையே கவனிக்கவும், கவலைகொள்ளவும் தோன்றுகிறது. மந்திரி சபையைக் கவிழ்க்கச் சதி செய்தவர்களெல்லாம், மண் கவ்வினர், என்று மகிழட்டும். நமக்கோ, மாண்புடையவர் என்று மக்களால் மதிக்கப்படுபவருக்கு எதிரிடையாகச் சதி நடந்ததே அதுவே துக்கத்துக்கும் வெட்கத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது.