பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17



எப்படிப் போட்டி ஏற்படலாம் ? அந்தப் போட்டியை, எப்படி சர்வ சாதாரணச் சம்பவம் என்று கூறி விட முடியும் ?

அவர் நல்லவராக இருக்கலாம், சுயநலமற்றவராக இருக்கலாம். அவருடைய கொள்கைகளும் திட்டங்களும், அவருக்குச் சரியானவை என்று அவர் மனதுக்குப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அதனாலேயே, வேறு திட்டங்களைக் கொண்டவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று பொருளோ என்று வாதாடி, ஓமந்தூரார் இன்ன திட்டத்தைப் புகுத்துகிறார், அது சரியில்லை, இதோ எமது திட்டம், இதுவே நாட்டுக்கு ஏற்றது, காலத்திற்கு உகந்தது. கலைக்கு உதவக் கூடியது, என்று மாற்றுத் திட்டத்தைக் கூறி, இந்தப் போட்டி நடத்தப்பட்டதா, என்றால் இல்லை ஓமந்தூரார் தலைவராக இருப்பதா ? பிரகாசம் அந்த பீடத்தில் இருப்பதா? என்பது தான் போட்டியிலே பிரச்னையாக இருந்ததேயொழிய, ஓமந்தூரார் திட்டத்துக்கும் பிரகாசம் திட்டத்துக்கும் போட்டி என்ற முறையிலே பிரச்னை இல்லை.

இங்கு தான், சூட்சமும் இருக்கிறது—வெற்றிக் களிப்பிலே பலர் இதனை மறந்திருப்பர்—வேதனையை ஏன் கிளறுவது என்பதற்காக பலர் மறைத்திருப்பர்—உள்ளம் வெளியே தெரிந்து விடப் போகிறது என்பதற்காக சிலர் இதனை மறுத்தும் உரைப்பர்—ஆனால் ஆர அமர யோசிக்கும் எந்த நேர்மையாளரும் இந்தச் சூட்சமத்தைத் துச்சமெனக் கருதி விட மாட்டார். என்பது திண்ணம்.

நாடாளும் கட்சியிலே நல்லவர் என்று நாட்டு மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு தலைவருக்கு, காரணமின்றி— வெளியே பகிரங்கமாக காரணம் ஏதும் கூறப்படாத நிலையில்—போட்டி ஏற்பட்டிருக்கிறது. அவருடைய குணம் சந்தேகிக்க படவில்லை, அவருடைய திட்டம் தாக்கப் படவில்லை மாற்றுத் திட்டம் எதுவும் தீட்டப்படவில்லை, என்றாலும், அவருக்குப் போட்டி—போட்டியா அது—பூசல் !--பூசலும் சாதாரண-