பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21



கிளம்பி அவரை ஒழித்து விட்டு, வேறு ஒருவரை பீடத்தில் அமர்த்துவோம், என்று துணிந்து கூறவும். அதன்படியே, காரியம் ஆற்றவும், ஒரு கூட்டத்தினருக்கு எண்ணமும் துணிவும், வழியும் வசதியும், வல்லமையும் இருக்கிறது என்றால், நாட்டிலே, எப்படிப்பட்ட சூழ்நிலை இப்போதும் இருக்கிறது என்பது விளங்கவில்லையா ? அது விளங்கும் போது, வேதனை ஏற்படவில்லையா !

  • பனகல்—பொப்பிலி— இவர்கள், தேசத் துரோகிகள், காங்கிரசின் விரோதிகள், ஆகவேதான், அவர்களை ஒழித்தோம்—என்றனர்.
  • ஓமந்தூரார்மீது படை எடுக்க, என்ன காரணம்? ஓராண்டுக்கு முன்பு அவரை ஏத்தி ஏத்தித் தொழுதவர்கள், இப்போது அவரிடம் என்ன குறையைக் கண்டுவிட்டனர்? ஏன் அவர்மீது போரிட்டனர்? சூட்சமம். மக்களுக்குப் புரிகிறது—புரியவே தான், குமாரமங்களக் குணாளர் மனம் புண்ணானாலும் சரி என்று துணிந்து, அன்று கூவினர், என்று கருதவேண்டியிருக்கிறது. எந்தக் கட்சியினராக இருந்தாலும் சரி, எவ்வளவு நல்லவராக இருந்தாலும் சரி, நமக்குப் பயன்படவில்லை, நமது ஆதிக்கத்தை வளர்க்கும் காரியத்திலே அக்கரை காட்டவில்லை என்றால், அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வேறு ஒருவரை, நமக்குப் பயன்படக்கூடிய ஒருவரை, பீடத்தில் ஏற்றவேண்டும். அதற்காக, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனங்களின் காதுக்கு இனிக்கக்கூடிய ஏதாவதோர் காரணத்தைக் காட்டி எதிர்ப்பைக் கிளப்ப வேண்டும். பகிரங்கமாகவோ, மறைமுகமாகவோ, எப்படியோ வேலை செய்து வெற்றி காண வேண்டும், என்று எண்ணும் ஓர் கூட்டம் நாட்டிலே இருக்கிறது என்று உண்மையைக் காணும்போது, வேதனையும் திகிலும் ஏற்படாமலிருக்க முடியுமா? நமக்குப் பயன்படவில்லையானால், மலரையும் சருகு என்று மார்தட்டிக் கூறும் மகானுபாவர்கள். மறத்தமிழர் நாட்டிலே அறிவு அரசு செய்யும் நாட்களிலேயும் ஆதிக்கத்தில் இருப்பது அறியும்போது, உள்ளம் வேதனைப்படாதிருக்குமா?