பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22



தடை உத்தரவு பிறப்பித்தார். ஸ்ட்ரைக்குகளை உடைத்தார். சிறையில் பலரைத் தள்ளினார். ஓமந்தூரார் காங்கிரசாட்சியின் திட்டத்தின்படி யாராரை ஒடுக்க வேண்டுமென்று முறை இருக்கிறதோ, அதன்படி அவர்கள்மீது கோபிக்கவும், அவரும் அவர் உள்ள கட்சியும், கொண்டுள்ள போக்கையும் திட்டத்தையும் கண்டிக்கவும், காரணம் உண்டு—அந்தக் கண்டனம் நியாயமானது—கண்டனத்துக்குப் பக்கபலமாக அவர்களுக்குப் பலம் இல்லை என்பதாலேயே, நியாயமற்ற காரியம் இது என்று கூறிவிட முடியாது. ஓமந்தூராரின் நடவடிக்கையினுல்—அவருடைய தலையிலே உள்ள மந்திரி சபையின் போக்கினால், அந்த மந்திரி சபையை அமைத்த காங்கிரசின் கொள்கையினால், உரிமை இழந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. அவரை ஒழிக்க கங்கணம் கட்டியவர்கள், இந்தக் காரியத்துக்குச் 'சபாஷ்', கூறியவர்கள், அவருடைய சொந்தக் கட்சியினர், அவரைக் கவிழ்க்கச் சதி செய்தனர். பெரியார் ராமசாமியோ, ஜீவானந்தமோ அல்ல, கவிழ்க்கும் வேலைக்குக் கிளம்பினவர்கள். ஓமந்தூரார் போலவே கதரணிந்து, அவருடனேயே காங்கிரசில் தங்கி, அவருக்குக்கிடைத்தது போலவே மஞ்சள் பெட்டியின் மகத்துவத்தைப்பெற்று மக்களின் ஆட்சி மன்றத்திலே இடம் பிடித்துக்கொண்ட வைத்தியநாத ஐயரும், வரதாச்சாரியாரும், கிளம்பினர் காசா சுப்பாராவ் ஜல்லடம் கட்டினார். பாரததேவி ஆசிரியர் ராமரத்தின ஐயர் சரம் விட்டார். இந்துஸ்தான் ஆசிரியர் நாராயண ஐயங்கார் இழித்தும் பழித்தும் எழுதினார். இவைகளைக்கண்ட மக்கள் பிராமணர் ஒழிக என்று கூவாமல்வேறென்ன சொல்லிக் கூவமுடியும்? ராதாபாய் மணாளரின் பண்பட்ட உள்ளம் புண்படுமோ என்ற அந்த நேரத்தில் தோன்றும்! ஓமந்தூரார் ஒரு தவறும் செய்யவில்லை. அவரிடம் ஒரு குறையும் காணோம். அவரை, மதுரை ஐயரும், திருவல்லிக்கேணி ஆச்சாரியாரும், ஆந்திரதேசப்பந்துலுவும் எதிர்க்கிறார்களே காரணமின்றி, என்று எண்ணியபோது உள்ளம் கொதித்தது. அந்தக் கொதிப்பிலே இருந்து பிறந்தது ஓர் முழக்கம்—பிராமணர் ஒழிக என்று இப்படி எல்லாம் கூவலாமா? அதிலும் காங்கிரஸ்காரர்கள் இப்படிக் கூச்சலிடலாமா?