பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


இருக்கிறது. அவர் திகைக்கிறார், மேடையிலே வகுப்பு வாதம் பேசுபவர் இல்லை—செயலிலும், தனியான பேச்சுகளிலும், வகுப்பு வாதம் வேலை செய்கிறது என்று அனுபவப் பூர்வமாக கண்டறிந்து, திகைத்து, அந்த வகுப்பு வாதம், இந்தியாவையே நாசமாக்கி விடும் என்று கூறிக் கவலைப்பட்டு, வகுப்பு வாதத்தை விட்டொழிக்கும்படி, அன்புரை வழங்குகிறார். ஆனால் முதலமைச்சர் ஓமந்தூராரே, இன்று ஓர் வகுப்பு வாதியாகக் காணப்படுகிறார், பல காங்கிரஸ் தலைவர்களின் கண்களுக்கு!!

வகுப்பு வாதம் கூடாது என்று தான் அவர் பேசுகிறார். ஆனால் அவரை வகுப்புவாதி என்று தான், அவர் வாழும் காங்கிரஸ் வட்டாரத்திலேயே சிலர் கூறுகிறார்கள். பாரததேவி சித்திரநடையிலேயே எழுதிற்று, விபூதி பூசும் ராமசாமிப் பெரியார் இவர் என்று! சுதந்திரா எனும் ஆங்கில வார இதழில், ஓமந்தூரார் ஒர் வகுப்புவாதி என்று பொதுவாகக் கூறியதோடு விடவில்லை, அவர் ஓர் 'பிராமணத் துவேஷி' என்று எழுதியதுடன் திருப்தி அடைய வில்லை, அவருடைய தலைமையில் நடைபெறும், மந்திரி சபையே பிராமணத் துவேஷ சபை!! என்று சென்ற இதழில் கூட எழுதி இருக்கிறது.

வகுப்பு வாதத்தை விரட்டப் போய், வகுப்புவாதி என்ற தூற்றலைப் பெற்றுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர். இதுகண்டு, அவர் மேலும் திகைப்படையக் கூடும். திகைப்புகூடாது, தெளிவு பெற, சற்றுத் தீர் யோசிக்க வேண்டும். வகுப்பு வாதம் என்றால் என்ன? ஏன், அது மாபெரும் குற்றமாக கூறப்படுகிறது? யாரால் கூறப்படுகிறது? எந்தெந்தச் சமயத்தில் கூறப்படுகிறது? என்ன நோக்கத்துடன் கூறப்படுகிறது?— இவைகளைப் பற்றி முதலமைச்சரும் அவர் வழி சிந்திக்கும் நபர்களும் யோசிக்க வேண்டும்—அப்போது, வகுப்பு வாதத்தின் பிறப்புவளர்ப்பு விளங்கும்—உண்மைக் குற்றவாளிகள் தெரிவர்.

மேடையை மட்டும் கவனித்தால், வகுப்பு வாதம் தெரியக்காணோம் என்கிறார் முதலமைச்சர். அது முழு உ ண்மையல்ல.

பிரிட்டிஷார், இவ்வளவு பெரிய நாட்டை எப்படி அடக்கி அள முடிந்தது?