பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30



இச்சொல் துடிதுடிக்கச் செய்திருக்கிறது! பலருடைய அரசியல் வாழ்வை வாட்டி வதைக்கிறது—இன்றும் வதைக்கிறது. விழிப்புணர்ச்சியுடன் காணப்பட்டால், விவேகியாகத் தெரிந்தால், வீரனாகக் காட்சி தந்தால் போதும், இந்தச் சொல் கிளம்பும், அவரை வதைக்க, அரசியல் வரலாற்றை, இந்தச் சொல் பாதித்ததைப் போல, டயரின் குண்டுகள்கூடப் பாதிக்கவில்லை. இதனால், மனம் உடைந்தவர்கள், வாழ்க்கை நொருங்கியவர்கள் எவ்வளவு பேர் ! சந்தேகமும் கண்டனமும், சொல்லடியும் கல்லடியும், எவ்வளவு பேருக்கு இந்தச்சொல் வாங்கித்தந்தது! இந்தச் சொல்லின் சரிதமே ஓர் சோகத் தொடர்கதை! தியாகராயரில் தொடங்கி இன்று ஓமந்தூரார் வரையிலே உள்ள தொடர்கதை ! ஓமந்தூரார் மந்திரி சபையை, இன்று வகுப்புவாத மந்திரிசபை, பழைய ஜஸ்டிஸ்கட்சி வாடை வீசும் மந்திரிசபை என்றெல்லாம், காங்கிரஸ் கட்சியினரே கூறுகின்றனர்.

ஓமந்தூராரைச் சில காங்கிரஸ்காரர்கள் வகுப்புவாதி என்று கூறுகின்றனர்.

ஓமந்தூரார் மந்திரிசபையை ஆதரிப்பவர்கள், மந்திரி சபையைக் குறைகூறுபவர்களை, வகுப்புவாதிகள் என்று கண்டிக்கின்றனர்.

ஒரு பிரிவினர், மற்றப் பிரிவினரின் கண்களுக்கு வகுப்பு வாதிகளாகத் தெரிகின்றனர்.

ஓமந்தூரார் உள்ளம் நோகிறது! வகுப்புவாதத்தை ஒழிக்க அரும்பாடுபடும் நம்மை வகுப்புவாதி என்று வகுப்பு வாதச்செயல் புரிபவர் குறைகூறுகிறார்களே! இது என்ன காலக்கேடு!—என்று எண்ணி வருந்துகிறார்.

அதுபோலவே, காங்கிரஸ் கட்சியிலே ஒருசாரார் பேசுவது தேசியம்! காரியமோ அசல் வகுப்புவாதம்—இந்த இலட்சணத்தில் வகுப்பு வாதத்தை ஒழிக்கப் போவதாக வேறு வாய் வீச்சு! இப்படி ஒரு வகுப்பு வாதியை நாங்கள் கண்டதே இல்லை—என்று கண்டிக்கிறார்கள்.