பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


48, ஏப்ரல் 5ம்தேதி, தலையங்கத்தில் தீட்டுகிறது. அதாவது, வகுப்புவாதி. பார்ப்பனத் துவேஷி, என்ற ஏசல், 'தினசரி'யின், நட்டத்தின் மீது வீழ்ந்த பிறகு.

சமீப காலமாக விஷமப் பிரசாரம் நடை பெறுகிறது என்று தினசரி எழுதுகிறது. முழுஉண்மை அல்ல! தினசரி சொக்கலிங்கனார் தினமணி ஆசிரியராக அமைவதற்கு முன்பிருந்தே நடைபெறுகிறது—கால் நூற்றாண்டாக இக்கடுமொழி வீசப்பட்டு வருகிறது. இந்த விஷமத்தனம் நடைபெறுகிறது—நடை பெற்று வந்திருக்கிறது என்பது மட்டுமல்ல உண்மை. நண்பர் சொக்கலிங்கமும் சேர்ந்து நடத்தி வந்தார், இந்த விஷமப் பிரசாரத்தை!! தன் தலை மீது, இதே வசைச் சொல் வீசப்படும் என்று எண்ணியிருப்பாரா, அந்த நாட்களில்!

அந்த நாட்களில், அவருடைய அறியாப் பருவத்தில், என்றபொருளில் கொள்கிறோம், அந்த வாசகத்தை.

இன்று, அனுபவம் நிரம்பப் பெற்று, உண்மையில் வகுப்புச் சுயநலமிகள் யார் என்பதைக் கண்டறிந்து, வகுப்பு நீதிக்காகப் போராடக் கிளம்பி, வகுப்புவாதி என்று ஏசப்படுகிறாரே. அந்த ஏசல் அவருக்குக் கோபத்தை மட்டுமல்ல. சிறிதளவு வருத்தத்தையும் தந்திருக்கும். இன்று நாம் எந்தக் காரியத்தை வகுப்பு நீதிக்காகச் செய்கிறோமோ, எந்தக் காரியம் செய்வதற்காகத் தூற்றப்படுகிறோமோ, இதையே, பல ஆண்டுகளுக்கு முன்பு, நீதிக் கட்சியினர் செய்த போது, அவர்களை நாம் எவ்வளவு பதை பதைக்கத் திட்டினோம், எவ்விதமெல்லாம். கண்டித்தோம்—என்பது பற்றி, அவர் எண்ணும் போது இரண்டோர் சொட்டுக் கண்ணீர் வராமலிருக்குமா! விஷமப் பிரசாரம்! ஆ ! சமீப காலமாக, இவர் மீது ! பல காலமாக, நம்மவர் மீது !!

மெஜாரட்டி வகுப்பாரைத் தூக்கிவிடுகிற காரியத்தைக் கண்டு, பிராமணத் துவேஷம் என்று விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் என்று தினசரியார் தீட்டுகிறார்.