பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36



கூடிய காங்கிரஸ் கூட்டுறவை விட்டு, பதவி கிடைக்காத தொல்லை நிரம்பிய வகுப்புவாதம் பேசுவது ஏன்? என்பதைச்சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். "வகுப்புவாதம்" பேசுவதாக 'ஜாதித்துவேஷத்தை' ஊட்டுவதாக, "பார்ப்பன துவேஷம்” பேசுவதாக பாமர மக்களிடை ருசிகரமான பிரசார முறைகளைக் கொண்டு எடுத்துக்கூறி, தேர்தல்களில் நம்மைத் தோற்கடிக்கும் "திறமை" நமது மாற்றார்களிடம் இருக்கிறது என்பது தெரிந்தும். நாம் ஏன் அவர்களை எதிர்க்கிறோம்?. சும்மா இருந்தால் சுகம் உண்டு என்பதற்கு அவர்கள் ஜாடை மாடை காட்டியும் நாம் ஏன் சமர்ச் சுழலில் விழுகிறோம்.

வெறும் சுகவாழ்வு, சுயநலம், பட்டம், பதவி, இவைகளே தேவை எனில், இவைகளைச் சுலபத்திலே பெறக்கூடிய வழி எது என்பதை மட்டுமே யோசித்து, காலத்துக்கேற்ற கோல மிட்டு வாழ் முடியும், ஆனால் எதற்காகப் புயலின் முன் கப்பலைச் செலுத்துவது போல், போராட்டத்தில் ஈடு படுகிறோம்? எதிரிகளின் சக்தி பாமரரை ஏய்க்கக்கூடிய விதத்தில் இருக்கிறது என்பது தெரிந்தும், நம்மைப் பற்றி தாறுமாறான பிரச்சாரத்தை தந்திரமாகச் செய்யும் கூட்டம் எதுசெய்யினும் செய்க, எத்தகைய தொல்லைதரினும் தருக, என்று உறுதியுடன் நாம் இருக்கக் காரணம் என்ன? நமக்கு, நம் மாற்றார்களின் வலிமை தெரியாதா? தெரியும் பலவிதமான சாதனங்கள் அவர்களிடம் இருப்பதும் தெரியும். பாமரர் அவர்களின் பிரபாரத்துக்குப் பலியாகிறார்கள் என்பதும் தெரியும். நம்மைத்தாக்க அவர்கள் உபயோகிக்கும் கோடாரிக்கு "காம்புகள்" நம்மவரிலேயேகிடைப்பதும் நன்கு நடிக்குத் தெரியும். தெரிந்தும் எதிர்க்கிறோம். பொல்லாங்கும் பழியுமே பரிசாகக் கிடைக்கிறது என்று தெரிந்தும் போரிடுதிறோம் ! ஏன்? நமக்கு பித்தமா ?

ஆம்? பித்தமே கொண்டுள்ளோம் ! ஜாரின் படைபலம், பண பலம், துருப்புகளின் ஈட்டிமுனையின் கூர் தெரிந்தும், வெனின், ஜார் ஆட்சியை ஒழித்தேதீருவேன் என்று ஓயாது கூறி வந்தாரே! உருமாறியும், ஊரூராக அலைந்தும், உற்றார் உறவினரைப்பற்றிக் கவலையற்றும், புரட்சிப் போரை, புது உலக-