பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9



சில திங்களுக்கு முன் சென்னை பச்சையப்பன் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேச வந்த ஆச்சாரியார், அந்த நேரத்தில் தனக்குள்ள நிலையை விளக்க மேற்குறித்துள்ள உவமையைக் கூறினார். அதற்கு நல்லதோர் விளக்கமும் தந்தார். அதாவது, வேளாண் மக்கள் தங்களுக்கு வேண்டிய பாலை மட்டும் கறந்து கொண்டு, மிச்சத்தைக் கன்றுக்குட்டிக்கு விட்டுவிடுவார்கள். கோமுட்டி மக்கள் பசுவின் இரண்டு காம்புகளை கன்றுக்குட்டிக்கே ஒதுக்கி விடுவார்கள். ஆனால் பார்ப்பனர்களோ கன்றுக்குட்டிக்கு ஒரு சொட்டும் விடாமல் பசுவை ஒட்டக் கறந்துவிடுவார்கள்--என்று பார்ப்பன மக்களின் உள்ளக்கிடக்கையை ஐயத்திற்கிடமில்லாமல் எடுத்துக் கூறியுள்ளார் ஆச்சாரியார்.

பார்ப்பார் வீட்டுப் பசுங்கன்று ஒன்று மற்றொரு கன்றைப் பார்த்து. 'பால் சாப்பிட்டிருக்கிறாயா; அது எப்படி இருக்கும்?' என்று கேட்குமாம்!

பார்ப்பனரின் இரக்கத் தன்மைக்கு ஆச்சாரியாரைக் காட்டிலும், இந்த முறையில் வேறு எவராலும் நற்சாட்சிப் பத்திரம் தரமுடியாது. ஆச்சாரியார் கூறிய இதே வாசகத்தை வேறு எந்தத் திராவிடராவது கூறி இருந்தால், இதற்குள் நில நடுக்கமே ஏற்பட்டு இருந்தாலும் ஏற்பட்டு இருக்கக்கூடும்!

சுவாமி விவேகாநந்தர் பார்ப்பனர்களைக் கண்டித்துப்பேசி இருப்பதைப்போல் இதுவரையில், நமது கட்சித் தோழர்களில் எவரும் பேசினது கிடையாது.

இப்படி ஒரு சமூகம் ஏன் ஒவ்வொரு காலத்திலும் நேரடியாகப் பழிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நல்ல முறையில் இப்போக்கினை மாற்றிக்கொள்ள, மாற்றி அமைக்கப் பார்ப்பன இளைஞர்கள் முன் வரவேண்டும்; அத்தகுநிலை இப்பொழுதே ஏற்பட்டு இருக்கிறது. தினம் தினம் வளர்ந்துகொண்டும் வருகிறது, மேலும் மேலும் வளர வேண்டும். அப்பொழுதுதான் பார்ப்பனிய வாழ்க்கை முறை தொலைந்து நாட்டில் ஜனநாயக வாழ்க்கை ஏற்பாடு மலர வழி பிறக்கும்.