________________
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை திக்கெட்டும் குறள் பரப்பத் திருவள்ளுவர்க்கும் சிலை பத்து சிலை வைத்ததனால் - அண்ணன் தமிழன் பால் வைத்துள்ள பற்றுதலை உலகறிய ; அந்த அண்ணனுக்கோர் சிலை சென்னையிலே வைத்த போது.. ஆள்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.. ஆணையிடுகின்றார் எம் அண்ணா என்றிருந்தோம் அய்யகோ, இன்னும் ஓராண்டே வாழப் போகிறேன் என்று அவர் ஒரு விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது! எம் அண்ணா.. இதயமன்னா... படைக்கஞ்சாத் தம்பியுண்டென்று பகர்ந்தாயே; எமை விடுத்தும் பெரும்பயணம் ஏன் தொடர்ந்தாய்..? உன்கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே! எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்? நிழல் நீ தான் என்றிருந்தோம்; நீ கடல் நிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய்: நியாயந்தானா? நான்தானடா நன்முத்து எனச் சொல்லிக் கடற்கரையில் உறங்குதியோ? நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்? விரல் அசைத்து எழுத்துலகில் விந்தைகளைச் செய்தாயே; அந்த விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்? 23