பக்கம்:இதய உணர்ச்சி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

பெரியாராவர். அவர் கோல் வழுவாக் கொற்றவராக இருந்ததோடு தலை சிறந்த சான்றோராகவும் விளங்கினார். அவர் அன்பையும் அறத்தையுமே முதன்மையாகக் கொண்டு அரசியல் நடத்தி வந்தார் என்பதை அவருடைய இதய உணர்ச்சி என்னும் பெரு நூலிலிருந்து அறியலாம். அதில் அவர் தாம் தமது பொறுமையினாலும், இரக்கத்தினாலும், அறிவினாலும் கண்டறிந்த உண்மைகளை எல்லாம், உணர்ச்சியினாலெழுந்த அருள் மொழி மாணிக்கங்களாகத் திரட்டி வைத்திருக்கின்றார்.

இவ்வளவு அருமை வாய்ந்த சிறந்த நூலைப் படித்து அறிவெய்தவும் இன்ப முறவும் ஓர் நல்ல காலம் தமிழருக்கு கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்வெய்துகின்றேன். அறிஞர் திரு பொ. திருகூடசுந்தரம் பிள்ளையவர்கள் அந்த நூலைத் தமிழாக்கித் தருகின்றார்கள், பிள்ளையவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர்களானபடியினால் மூலத்திற்கு முரண்படா வண்ணம் மிகச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள்.

தமிழ் நாட்டிலுள்ள பெரியார்களுள் பிள்ளையவர்களும் ஒருவர். அவர்கள் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்குமே தமது வாழ் நாளைச் செலவு செய்து வருகிறார்கள். அவர்கள் தரும் இந்த அறிவுச் செல்வத்தினைத் தமிழகம் பேராதாவுடன் வரவேற்குமென்பதில் ஐயமில்லை.

நான் மார்க்க ஒளரேலியருடைய மணி மொழிகளைக்குறித்து எழுதுவதற்கேற்ற பேரறிவுடையேன் அல்லேன். ஆயினும் எனக்கு மனச்சோர்வு நிகழும் காலங்களிலெல்லாம், இம் மணி மொழிகள் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து உதவிசெய்து வருகின்ற படியினால்தான் இவ்வுரை எழுதத்துணிந்தேன்.

இவ்வுரை எழுத வாய்ப்பளித்த புத்தக வெளியீட்டாருக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலையகம்
தியாகராய நகர்,
சென்னை-17.
1–10–1951.
எம். எம். தண்டபாணி தேசிகர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/11&oldid=1105427" இலிருந்து மீள்விக்கப்பட்டது