பக்கம்:இதய உணர்ச்சி.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

49


யாராவது ஒருவன் உனக்குக் கேடு செய்தால் அத்தகைய மனிதன் உலகில் இல்லாமலிருக்க முடியுமா என்று உடனே உன்னைக் கேட்டுக்கொள். முடியாது. ஆதலால் முடியாத காரியத்தை விரும்பாதே. அத்தகைய மனிதர் உலகில் இல்லாமலிருக்க முடியாது என்று ஞாபகப்படுத்திக்கொண்ட அளவில், ஒவ்வொரு மனிதனிடமும் உனக்கு அன்பு உண்டாய்விடும்.

மேலும் பிறன் உனக்குச் செய்யக்கூடிய ஒவ்வொரு தீங்கையும் தாக்கி வெல்வதற்கு இயற்கை உனக்கு என்னென்ன நற்குணங்கள் அளித்திருக்கிறாள் என்பதையும் நினைத்துப் பார். அறியாதவனை வெல்வதற்குப் பொறுமை தந்திருக்கிறாள். இதே மாதிரி ஒவ்வொரு தீக்குணத்தையும் வெல்வதற்கு ஒவ்வோர் சக்தியைத் தந்து வைத்திருக்கிறாள்.

எந்தச் சந்தர்ப்பத்திலும், நெறிபிறழ்ந்து நடக்கும் மனிதனை உபதேசத்தால் திருத்த உன்னால் முடியும். ஏனெனில் குற்றம் செய்யும் ஒவ்வொரு மனிதனும் தன் லட்சியத்தை அடையாது நெறி தவறியவனே.

மேலும் உனக்கு என்னதான் தீங்கு விளைந்து விட்டது? குற்றம் செய்தவனாகக் கருதி நீ கோபப்படும் எவனும் உன் ஆன்மாவைக் கெடுக்கக்கூடிய தொன்றும் செய்துவிடவில்லை. தீங்கிற்கு ஆதாரம் உன் மனமே.

அறிவு இல்லாதவன் ஒருவன் அறிவு இல்லாதவன் செய்யக்கூடிய காரியத்தைச் செய்வதில் என்ன ஆச்சரியம்? அறிவு இல்லாதவன் அவ்விதந்தான் செய்வான் என்று முன்கூட்டித் தெரிந்து கொள்வதற்குரிய அறிவு உனக்கு இருந்தும், அவன் அவ்விதம் செய்யாமலிருக்க எதிர்பார்த்தது உன் குற்றமன்றோ?

92

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/51&oldid=1105990" இலிருந்து மீள்விக்கப்பட்டது