பக்கம்:இதய உணர்ச்சி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

சரீரம் மிகவும் பலஹீனமாயிருந்தும், அடிக்கடி நோய் வாய்ப்பட்டு வீழ்ந்தும், பிள்ளையவர்கள் இத்தகைய நூல்களை எழுதிவந்து தாம் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் என்பதை உலகத்துக்குப் பிரசித்தப்படுத்திக் காட்டி வருகிறார்கள். அவரைப் பார்த்துத் தமிழர் மற்றோரும் மேனாட்டு வடநாட்டு நூல்களைத் தமிழ்ப்படுத்தித் தமிழிலக்கியத்தை வளர்த்து வருவார்களானால் இன்னும் சில வருஷங்களுக்குள் நமது தாய்மொழியானது வங்காளி, குஜராத்தி, மராட்டி, தெலுங்கு முதலிய தனது சகோதரிகளின் முன் தலைநிமிர்ந்து நிற்கலாகும்.

பிள்ளையவர்களின் நூல்களுக்கு அன்னியரின் நான்முகம் அனாவசியம் என்று முதலில் சொன்னேன். ஆனால் நான் அவருக்கு அன்னியன் ஆகமாட்டேன். அவரை எனது அருமை நண்பர்களில் ஒருவராகவே கருதியுள்ளேன். ஆனதுபற்றியே அவருடைய வேண்டுகோளை மறுக்கத் துணியாது. அனாவசியமாயினும் இம்முன்னுரையை எழுத நான் முன்வந்தனன். படிப்போர் இந்நூலைச் சிரத்தையோடு படித்து, ஆயிரத்து எழுநூறு வருஷங்களுக்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் சத்தியத்தின் சக்கியினால் நித்தியக் தன்மை பெற்றுவிட்ட மார்க்க ஒளரேலியனுடைய மணிமொழிகளின்படி தங்கள் வாழ்நாளை ஒழுங்குபெற நடாத்திவர முயலவேண்டும் என்று வற்புறுத்தி இவ்வுரையை நிறுத்திக்கொள்வேன்.

பாரத்துவாஜ ஆசிரமம்,
சேரமாதேவி,
திருநெல்வேலி ஜில்லா.
பங்குனி ௨௯, துந்துபி.
வ. வெ. ஸுப்ரஹ்மண்ய ஐயர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/9&oldid=1105425" இலிருந்து மீள்விக்கப்பட்டது