பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்




தற்சிந்தனையாளர் சங்கத்தினர் Free Thinkers Association என்ற சங்கமைப்பாளர்கள்; ‘ஃபிரி திங்கர்’ (Free Thinker) என்ற இங்லீஷ் பத்திரிகையை 1870-ஆம் ஆண்டில் நடத்தினார்கள். இதே கால வட்டத்தில் 1860ல் ‘மெட்ராஸ் டைம்ஸ்’, 1868ல் ‘மெட்ராஸ் மெயில்’ 1886-ஆம் ‘தஸ் பெக்டேட்டர்’ என்ற பத்திரிகைகளும் வெளிவந்தன.

சென்னையில் லட்சுமி நரசு செட்டியார் நடத்திய ‘கிரசண்ட்’, ராஜா சர் மாதவராவ் வெளியிட்ட ‘நேட்டிவ் பப்ளிக் ஒப்பீனியன்’, இராமச்சந்திர ஐயரின் ‘மெட்ராசி’, பரமேஸ்வரம் பிள்ளையின் ‘மெட்ராஸ் ஸ்டான்டர்ட்’ என்ற பத்திரிகைகள் வெளி வந்து தேசத் தொண்டாற்றியதை நாம் மறக்க முடியாது.

இந்தப் பத்திரிகைகள் எல்லாம் வெளிவந்த பிறகுதான், 1882-ஆம் ஆண்டில் ஜி. சுப்பிரமணிய ஐயரால் ‘சுதேச மித்திரன்’ என்ற தமிழ் வார இதழ் வெளி வந்துள்ளது.

அதுவரை, தமிழில் நாளேடாக எதுவும் வெளி வந்ததாக்க் குறிப்பேதும் இல்லை. 1887-ஆம் ஆண்டில் ‘லலிதப்ரஸ் நோதயா’ அதாவது ‘லலிதபிரசனோதயா’ என்ற பெயரில் ஒரு தமிழ் தினசரி ஏடு வெளிவந்துள்ளது. இதுதான் தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நாளேடு ஆகும். இந்தப் பத்திரிகை நீண்ட நாள் நடத்தப்படவில்லை.

இதற்குப் பிறகுதான், 1892-ஆம் ஆண்டில் ஜி. சுப்பிரமணிய ஐயரால் வார ஏடாக நடத்தப்பட்ட ‘சுதேச மித்திரன்’ தமிழ் நாளேடாக வெளிவந்து நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு அரசியலுக்குத் தொண்டாற்றியதை நாம் நன்கு அறிவோம்.

இதன் ஆசிரியரான ஜி. சுப்பிரம்ணிய ஐயர்தான், 1885-ஆம் ஆண்டில் பம்பாய் நகரில் துவக்கப்பட்ட அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பத்திரிகையாளர்களிலே ஒருவராவார்.

‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர் சிறந்த தேசியவாதி, அவர் தனது 4.5.1887-ஆம் நாளிதழில் எழுதியதாவது :-