பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

ஆறு நாடுகளின் உருவாக்கமே நமது குடியரசு சட்ட அமைப்பு



விளம்பரம், விலைப்பட்டியல், போக்குவரத்துச் செய்திகளை வெளியிட, அரசு தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்று இந்தச் சட்டம் அறிவித்தது.

தலைமைச் செயலாளரிடம் மிகக் கஷ்டப்பட்டு அனுமதிபெற்றால் கூட, அந்த அனுமதி நீடிக்காது. ஆளுநர் நினைத்தால் அந்த அனுமதியை ரத்து செய்து விடலாம்.

பத்திரிகை அச்சடித்தான பிறகு அதன் பிரதி ஒன்றை உள்ளூர் நீதிமன்றத்தினர்க்கு உடனே, 24 மணி நேரத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதும் அதே சட்டம் தான்.

அரசு தலைமைச் செயலர் அனுமதி இல்லாமல் பத்திரிகையில் செய்திகளை வெளியிட்டால், அபராதம் உண்டு! எவ்வளவு தெரியுமா? 400 ரூபாய்! அந்த அபராதத்துடன் விவகாரம் முடிந்ததா என்றால், அத்துடன் சிறைத் தண்டனையும் உண்டாம்! எவ்வளவு காலம் தண்டனை என்று கேட்பவர்களுக்கு; ஆறு மாதம் என்கின்றது அந்தச் சட்டம்.

5. செய்தித்தாள் பதிவுச் சட்டம்
(ACT No. II OF 1835)

இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் சார்லஸ் மெக்கல்பால் என்பவர். இவர் டல்ஹெளசியைவிட கல்லுள்ளம் கொண்டவர். இவர்தான் செய்தித்தாள் பதிவுச் சட்டத்தை 1835-ஆம் ஆண்டு கொண்டு வந்து நடமாட விட்டவர்.

ஆனால், இவர் ஒரு நல்ல செயலையும் செய்துள்ளார். தன்னால் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் இந்திய மாநிலங்களுக்கு எல்லாம் பொருந்தக் கூடிய சட்டம் என்று கூறாமல், கொஞ்சம் இரக்க உள்ளத்தோடு, கிழக்கு இந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் மட்டுமே இந்தச் சட்டம் அமலாகும் என்பதை அவர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதனால் பத்திரிகையாளர்களுக்கு ஓரளவு மனக்குறையும் குறைந்தது.