பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/292

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

செய்தி என்றால் என்ன? தேர்வு செய்வது எப்படி?


வீழ்ச்சிகளைத் தோற்றுவிக்கும் சந்தைகளாகலாம்; பெண் காம உணர்ச்சிகளின் களமாகக் காணப்படலாம்; மதம், சாதி, அடிதடி மோதல்களாய் கலவர மூட்டலாம்; விஞ்ஞான விந்தைகளாக விளங்கலாம்; கொலை, களவு, மர்மக் குற்றங்களாகத் தென்படலாம்; சினிமா, நாடகம், இலக்கியம், கவிதை, கலைத்துறைகளாகக் காட்சி தரலாம்; இயற்கைச் சீற்றங்களால் தாண்டவமாடிடும் ட்சுனாமி, சூறாவளி, புயல், பூகம்ப, எரிமலைக் கோரங்களின் கொடுமை அழிவுகளாக உண்டாகலாம்; பல வகையான ஆன்மீக சம்பவங்களாகத் திகழ்லாம்; எனவே, செய்திகள் என்பவை உலகத்தின் பல தோற்றங்களால் உருவாகுபவையே! அவற்றைச் சேகரித்துத் தாள்கள் மூலம் தந்து மக்களை எச்சரிக்கையோடு விழிக்க வைத்து, வாழ்க்கை நடத்த உதவுபவைகளே செய்தித் தாள்களின் அற்புதப் பணிகளாகும்.

இந்த வகையான சமுதாய மேம்பாடுகளுக்காக உழைப்பதுதான் செய்தித் தாள்கள். அதனால்தான் மக்கள் அவற்றை விரும்பி வாங்கிப் படித்துத் தெளிவு பெற்றிட விரும்புகிறார்கள்.

எந்த ஒரு சம்பவமானாலும், அதை எங்கே நடந்தது? ஏன் நடந்தது? எப்போது நடந்தது? எதற்காக நடந்தது? என்ன முடிவு? என்பதை மக்களுக்கு விவரமாகத் தெரிவிப்பதுதான் செய்தித் தாள் கல்வியாகும்!

பள்ளிப் பாடங்களைப் போதிப்பவன் பள்ளி ஆசிரியன்; நாட்டு நடப்புகளை விளக்கமாகப் போதிப்பவன் செய்தித் தாள் ஆசிரியன்! இரு ஆசிரியர்களும் நாட்டுக்கும் வீட்டுக்கும் எதிர்கால நன்மைகளை விளைவிப்பவர்கள் என்றால் அது மிகையாகாது.