பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/312

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

செய்தியாளர் தவறு செய்தால் சட்டமன்றமே - நீதிமன்றமாகும்!



ஒன்றுக்கு மக்கள் பேரவை (Lok Sabha) என்றும், மற்றொன்றுக்கு மாநிலங்களவை (Rajya Sabha) என்றும் பெயர். மக்கள் பேரவை உறுப்பினர்கள் மாநிலங்கள்தோறும் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஆவர். மக்களவை உறுப்பினருக்குரிய வாக்குகளால் (Votes) தேர்வு செய்யப்படுபவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாவர்.

நாடாளுமன்றங்கள் இரண்டிலும், அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் தெரிந்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால், நாடாளுமன்றம், சட்ட மன்றங்கள் செய்திகளைச் செய்தியாளர்கள் சேகரித்து அவரவர் பத்திரிகைகளுக்கு அனுப்புவதுண்டு. அதை இதழ்கள் வெளியிடுவது அதனுடைய மக்கள் தொண்டுகளாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநிலச் சட்டப்பேரவை, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கும் முறைகளையும், எப்படி அமைச்சர் அவைகள்; மத்தியிலும் - மாநிலத்திலும் இயங்க வேண்டும் என்பதையும், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் எவ்வாறு அவைகளை நடத்த வேண்டும் என்பதையும், பேரவைக் கூட்டங்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதையும், மன்ற உறுப்பினர்கள் இயங்கும் நிலைகளையும் விவரமாக விளக்குகின்றது. அந்த விளக்கங்களை எல்லாம் செய்தியாளர்கள் நன்றாக உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற, சட்டமன்ற செய்திகளை எல்லாம் கவனக் குறைவு இல்லாமல், தவறு நேராமல் திரட்டிடச் சுலபமாக இருக்கும்.

சட்டப் பேரவை
நடவடிக்கைகள்

சட்டப் பேரவைகள் நடவடிக்கைகள் நேரத்தை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை :- கேள்வி நேரம், ஜீரோ நேரம் (zero Hour), பல்வேறு வகைத் தீர்மானங்கள் நேரம், விவாதம், பதில் என்பவை ஆகும்.

சட்டமன்றமானாலும், நாடாளுமன்றமானாலும், கேள்வி நேரங்களில் செய்தியாளர்களின் கவனம் கூர்மையாக இருக்க வேண்டும். ஏனென்றால், உறுப்பினர்கள் கேட்கும் கேள்வி-