பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/358

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

நேருக்கு நேர் சந்திக்கும் கலை!



பேட்டி தோல்வி பெறலாம் என்ற எச்சரிக்கை செய்தியாளர்களுக்கு இருப்பது நல்லது.

செய்தி சேகரிப்பவர்களுக்குப் புகழாசை இருக்க வேண்டும். பத்திரிகைக்கும் தனக்கும் நற்பெயர் தேடிக் கொள்பவராக இருப்பது நல்லது. ஆனால் சந்தர்ப்பவாதியாகும் ஆசைகள் அவரிடம் அண்டக் கூடாது.

பேட்டி எடுப்பவர் அதை நடத்திக் கொண்டே பேட்டி தருபவரின் கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும்போது, பேட்டிக் கருத்துக்கள் தடைப்படக் கூடாது. தொடர்பு விட்டு விட்டு அறுபடக் கூடாது. பேட்டிக்குப் போவோர் அவர்களுடன் ஒலிப்பதிவு நாடா (Tape Recorders)களைக் கொண்டு சென்றால், பேட்டிப் பணியும் சுலபமாக முடிவடையும்.

பேட்டி எடுக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நேரம், இடம், கேள்விப் பட்டியல், பொறுப்புணர்ச்சி, பொறுமை, நல்ல உடைத் தோற்றம், குறிப்பு எடுக்கும் கருவிகள், எவற்றை வெளியிடலாம், எதை வெளியிடக் கூடாது என்ற கேள்வி பதில் தகுதிகள் ஆகியவற்றைச் சிந்தித்து நடக்க வேண்டும்.

பேட்டி தருபவரை விட - நாம் விஷயமறிந்தவர் என்றோ, அவர் பதில் கூறும்போது இடையீடு செய்து எரிச்சலூட்டு வதாகவோ, அடிமைபோல - அவரிடம் ஏதோ பயன் பெறுபவர் போல பேட்டியளிப்போர் நினைக்கும் வகையில், செய்தியாளர் நடந்து கொள்ளக் கூடாது. குறிப்பாக ‘கவர்’ கிடைக்குமா? மதுபான விருந்துண்டா? என்ற தவறுகளுக்குச் செய்தியாளர்கள் இடமளிக்கக் கூடாது?