பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/381

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
பாரதியார் தமிழ்ப் பற்று
பத்திரிகையாளரிடம் மணக்க வேண்டும்

(தமிழ்மொழிப் பற்றுக் கட்டுரை)


றைமலை அடிகளாரின் கல்லூரி மாணவர்களிலே ஒருவர் நாவலர் சோமசுந்தர பாரதியார், எம்.ஏ.பி.எல். அவர்கள். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் தலைவராய் இலங்கியவர்.

இவர்தம் ஆரூயிர்த் தோழர் தேசீய கவி சுப்பிரமணிய பாரதியார். அடிகளின் அருமை பெருமைகளையும், தமிழ்த் தொண்டினையும் அறிந்த பாவலர் பெருமான் பாரதியார், தம் பாடல்கட்கு மறைமலை அடிகளாரிடம் மதிப்புரை பெற ஆவல் கொண்டார்.

அவ்வாவலை நிறைவேற்றிக் கொள்ள நாவலர் சோம சுந்தரப் பாரதியாரைத் துணை கொண்டார். அடிகள் அப்போது தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையின் விழாவுக்குத் தலைமை தாங்கி இருந்தார்.

இடை நேரத்தில் இருவரும் அடிகளைக் கண்டனர். நாவலர் பாவலரை அடிகட்கு அறிமுகப்படுத்தினார். அவர் விருப்பத்தையும் அறிவித்தார். மூவரும் சிறிது நேரம் அளவளாவினார்கள்.