பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/387

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

385



அதிகாரிகளின் நற்செயல்களைப் போற்ற விரைந்து, மற்றவற்றை மறுக்க முனைந்து அற வழியே பொது வாழ்வை வழி நடத்தத் தொண்டு புரிந்தான். ‘தேச பக்தன்’. மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்ட தலைவர்க்குச் சொல் மலர்களால் அஞ்சலி செய்த அப்பத்திரிகை, திலகர், காந்தியடிகள், பெசண்ட் அம்மையார் முதலியோர் புகழை ஓதி, வழிபாடே நடத்தி வந்தது.

‘தலைமையேற்று ஒரு தேசத்தை நடத்துவோர் அந்நிலையில் அவர் தேசமேயாவர்; தேசம் அவரேயாகும். தலைமையாவது: தேசத்தின் உணர்வும் சக்தியும் திரண்டு தேங்குமிடம்’ என்று தலைமையை வணங்கும் நெறிக்கு விளக்கம் அளித்தார் திரு.வி.க.

‘தேச பக்தன் தோன்றியிராவிடில் வகுப்புவாதம் கிளைத்து ஓங்கியிருக்கும், வகுப்புவாதக் கட்சியின் நச்சுப் பல் தேசபக்தனால் பிடுங்கப்பட்டது. அக்கட்சியின் வேகம் ஒடுங்கியது. அது வறுத்த நெல்லாயிற்று; பல்லிழந்த பாம்பாயிற்று’ என்று தேசபக்தனின் தொண்டைத் திரு.வி.க. மதிப்பிட்டார்.

டாக்டர் சுப்ரமணிய ஐயர், சர் பட்டத்தைத் துறந்தபோது, ‘மயிலை முனிந்திரர்’ என்ற தலைப்பில் 21.6.1918-ல் திரு.வி.க. எழுதிய ஆசிரியர் கட்டுரையை சுப்ரமணிய ஐயர் பாராட்டினார்.

‘நானா எழுதினேன்? தங்கள் வீரத்தில் தோய்ந்த பக்தி அதை எழுதியது. தாங்கள் மூலம்; யான் கருவி’ என்று திரு.வி.க. பதிலிறுத்தலில், தன்னடக்கம் மட்டுமல்ல, கொள்கைக்குத் தன்னைக் காணிக்கையாக்கி, பக்தியின் படைக்கலனாகத் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்ட தகைமை விளங்கியது.

தெய்வ பக்தி, ராஜபக்தி, தேசபக்தி, மூன்றும் அவர் நோக்கில் மேலோங்கியிருந்தது. 16.8.1918ல் அவர் எழுதிய தலையங்கத்திலும் புலனாகிறது. ‘எங்கள் மன்னர் மன்னராகிய ஐந்தாம் ஜார்ஜுக்கு வெற்றி ஓங்கச் செய்து, எங்கள் பந்தத்தை அவர் வாயிலாக ஒழிக்கக் கருணை புரிவாயாக. நாங்கள் விரும்புவது சுதந்திரம்; வெறுப்பது அடிமைத்தனம். சாந்தி, சாந்தி, சாந்தி. அவனின்றி ஓரணுவும் அசையாது’ மன்னரை நம்புகிறாரே, மகேசுரன் துணையை நாடுகிறாரே, மக்கள்